ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கொலை குற்றவாளிகளான இந்திராணி மற்றும் பீட்டர் முகர்ஜீ ஆகியோரின் சாட்சியங்களை தவிர வேறு எந்த ஆதாரமும் இல்லை என்ற போதிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். “இது மிக மோசமான அநீதி” என்று சென்னையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பிரபல ஊடகவியலாளர் என்.ராம், ( தலைவர்-டி.எச்.ஜி பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ) தெரிவித்தார்.
“ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடிந்தவரை அவருக்கு சுதந்திரத்தை மறுப்பதே இந்த நாடகத்தை அரங்கேற்றியவர்களின் நோக்கமாகும்.மேன்மிகு நீதிமன்றங்கள் கூட இதற்கு பலியாகிவிட்டது என்பது மிகவும் திர்ஷ்டவசமானதாகும்.” என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் (டி.என்.சி.சி) கூட்டத்தில் திரு. ராம் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் “இதில் மிக முக்கியமாக தில்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு கடுமையாக விமர்சனம் செய்யப்பட வேண்டியதாகும். ஏனெனில் இந்த வழக்கு விசாரணையில் ப. சிதம்பரம் மீது குற்றம்சாட்டும் தரப்பிற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 7 மாதங்களாக ரிசர்வில் வைக்கப்பட்டு இருந்தது. ஓய்வு பெரும் காலத்திற்கு சற்று முன்னரே சிதம்பரத்திற்கு மேல்முறையீடு செய்வதற்கான அனைத்து வாசலை அடைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார் சம்பந்தப்பட்ட நீதிபதி. எனவே தான் வழக்கறிஞர்கள் மேல் முறையீடு செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டி இருந்தது ” என்று திரு.ராம் கடுமையாக சாடினார்.
“நீதிபதிகள் பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் சிதம்பரத்தின் ஜாமீனை நிராகரித்து உத்தரவிட்டதில் பல தவறுகள் உள்ளன. உதாரணமாக , பி. சிதம்பரத்தின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் கூறுகிறார்கள்’ – எனினும் இது முற்றிலும் தவறானது” என்று திரு.ராம் கூறினார்.
”அதே நீதிமன்ற பெஞ்ச் முன்னே மறுஆய்வு மனுவை விரைவாக நகர்த்த வேண்டிய அவசியம் உள்ளது அல்லது 5 நீதிபதிகள் முன்னிலையில் ‘க்யூரேடிவ் பெட்டிஷன்’ தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று திரு. ராம் மேலும் கூறினார்.
இந்த வழக்கை பொறுத்தவரை கொலை குற்றவாளிகள் இருவரின் சாட்சியங்களை தவிர வேறு எந்த அடிப்படையும் இல்லை. இந்த வழக்கை பொறுத்த வரையில் ஆவணங்கள் சேதப்படுத்தப்படும் என்ற எந்த ஆபத்தும் இல்லை, எந்த சாட்சிகளுக்கும் அச்சுறுத்தல்களும் இல்லை . இருந்தும் ப.சிதம்பரத்திற்கு நீதி வழங்கப்படவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும் என்று கூறினார் திரு.ராம்.
முன்னதாக இவர் பாஜக அரசு ரஃபேல் விமானம் வாங்குவதில் இமாலய ஊழல் செய்துள்ளது என்று தக்க ஆதாரங்களை முன்னிறுத்தி நிறுவி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.