மலேரியா மருந்துகள் கொரோனாவுக்கு வேலை செய்கிறது என்று செய்தி பரவ ஆரம்பித்து இருக்கிறது. இதை ஆரம்பித்தது வாட்சப் ரசிகர்கள் அல்ல. அமெரிக்க அதிபர் டிரம்ப். அவர் ஒரு நிருபர் கூட்டத்தில் இதை சொல்லி, இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை (FDA) அனுமதியும் அளித்து விட்டது என்று உளறி விட்டார். தகவல் பரவி விட்டது. அப்படி எந்த அனுமதியும் அளிக்கவில்லை என்று FDA உடனடியாக மறுப்பு வெளியிட வேண்டி இருந்தது.
வழக்கமாக ஒரு செய்தியை பரிசீலிக்க வேண்டுமானால் எளிய விதி இருக்கிறது. டிரம்ப் சொன்னார் என்றால் கேள்வியே இன்றி அது பொய் என்று சொல்லி விடலாம்.!
அவர் ஒரு புறம் இருக்க, மலேரியா மருந்துகள் இதற்கு வேலை செய்யுமா என்று இன்னமும் சோதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கிட்டதட்ட 40 மருந்து / தடுப்பூசி வகைகள் உலகெங்கும் பரிசோதனை செய்யப்பட்டது வருகின்றன. டஜன் கணக்கிலான புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. உலக வரலாற்றில் இதற்கு முன்பு இந்த அளவுக்கு மருத்துவ ஆராய்ச்சித் துறையில் ஒருங்கிணைந்த முனைப்புகள் நடந்ததில்லை என்ற அளவு ராப்பகலாக டியூட்டி செய்து வருகிறார்கள்.
இதில் ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஒரு மருந்து கொரோனாவுக்கு வேலை செய்கிறது என்று தெரிய வந்தால் அதை உடனடியாக உலகெங்கும் அறிவிப்பார்கள்.
ஆனால் புதிய மருந்து ஒன்று வேலை செய்கிறது என்று நாளையே கூட தெரிய வந்தால் அது சந்தைக்கு பரவலாக வருவதற்கு ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் பிடிக்கும்.
எனவே முறையான, அதிகார பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
ஆக்கம்: அரவிந்த்