Islamophobia Madhya Pradesh

‘முஸ்லிம் என நினைத்து கொடூரமாக தாக்கிவிட்டோம்’ – வழக்கறிஞரிடம் போலீசார் மன்னிப்புக் கேட்ட லட்சணம்!

” முஸ்லிம் என நினைத்து அடி வெளுத்து விட்டோம்”, இந்து வழக்கறிஞரிடம் மத்தியப் பிரதேச போலீஸ் மன்னிப்புக் கேட்ட லட்சணம்..

“இஸ்லாமிய எதிர்ப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான காவல்துறையின் கடும் போக்கு” ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது பாசிச பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசத்திலுள்ள பெத்தூல் எனும் நகரில் நடந்த சம்பவம்.

சுமார் 10 ஆண்டுகளாக முன்னணி தினசரிகளில் பத்திரிக்கையாளராக போபாலில் பணியாற்றிய தீபக் பந்த்லே என்பவர் 2017-ல் தான் பெத்தூலில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கியிருக்கிறார்.

நடிகை நக்மா கண்டனம்..
இச்சம்பவத்தில் வழக்கறிஞர் தீபக் பந்த்லே பாதிக்கப்பட்ட விபரம் வருமாறு:

கடந்த 15 வருடங்களாக நீரழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தீபக் மார்ச் 23 அன்று சுகவீனமாக உணர்ந்ததால் அன்று மாலை 6 மணியளவில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நாடு தழுவிய ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஆனால், பெத்தூலில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. அப்போது வழியில் இருந்த போலீஸாரால் தடுக்கப்பட்டார்.

அவரது நிலையை போலீஸாரிடம் எடுத்துக் கூறிய போதும், அதைக் காது கொடுத்துக் கேட்காமல் ஒரு போலீஸ் தீபக்கை ஓங்கி அறைந்தார்.

‘நான் ஒரு வழக்கறிஞர்’:

அப்போது, ” நீங்கள் அரசியல் சாசன வரம்பை மீறி செயல்படுகிறீர்கள். நான் தவறிழைத்ததாக நீங்கள் கருதினால் IPC 188ஆம் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுங்கள்”, என்று கூறினார். இதைக் கேட்ட உடனே அவர்கள் நிதானமிழந்து அவரையும், அரசியல் சாசனத்தையும் வசைபாடத் தொடங்கினர். உடனே அங்கு குழுமிய மேலும் பல போலீஸாரும் சேர்ந்து கண்மூடித்தனமாக அவரை தடியால் தாக்கினர்.

நான் ஒரு வழக்கறிஞர்; உங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்”, என்று சொன்ன பிறகுதான் அடிப்பதை நிறுத்தினர். அதற்கிடையே அவரது காதில் இருந்து இரத்தம் கொப்பளித்தது.

பிறகு அவரது சகோதரனையும், நண்பனையும் வரவழைத்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

மறுநாள், மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் படோரியா அவர்களிடமும், மாநில DGP விவேக் ஜோஹ்ரி அவர்களிடமும் இதுபற்றி புகாரளித்தார்.

தொடர்ந்து முதல்வர், மாநில மனித உரிமை ஆணையம், உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பிய வண்ணம் இருந்தார்.

இதுபோக சம்பவம் நடந்த நாளன்று பதிவான CCTV காட்சிகளைக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்டிருந்தார். ஆனால் அவற்றை (அரசு நிர்வாகம் அழித்து விட்டதால்) தீபக்கிற்கு மறுப்புத் தெரிவித்து பதில் அனுப்பினர்.

அதன் பிறகு, அவருடைய புகாரை வாபஸ் வாங்க வேண்டுமென போலீஸார் தொடர்ந்து வற்புறுத்தத் தொடங்கினர்.

மிரட்டல்:

” உங்களைத் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்தும், அதற்காக மன்னிப்புக் கோரியும் நாங்கள் அறிக்கை வெளியிடுகிறோம்”

என்று சில உயரதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும் தீபக்கும், அவரது சகோதரரும் சுமூகமாக வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டுமெனில், அவருடைய புகாரை வலியுறுத்தாமல் கடந்து செல்ல வேண்டும் என்று மிரட்டப்பட்டார்.

இதற்கெல்லாம் மசியாமல் தன்னுடைய புகாரின் அடிப்படையில் FIR பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியதின் அடிப்படையில் மே 17 அன்று சில போலீஸார் அவரது வாக்குமூலத்தைப் பெற அவரது வீட்டிற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் தெரிவித்த விஷயம் தான் அதிர்ச்சியின் உச்சம்.

உரையாடலை பதிவு செய்த தீபக்:

அப்போது நடந்த உரையாடலை தீபக் பதிவு செய்துள்ளார். அதில் போலீஸார்,” உங்களுடைய தாடியை வைத்து முஸ்லிம் என நினைத்து கடுமையாகத் தாக்கிவிட்டோம். பொதுவாக மதக்கலவரங்களின் போது இந்துக்களுக்கு ஆதரவாகவே போலீஸார் நடந்து கொள்கிறோம். உங்களைத் தவறாகத் தாக்கிய போலீஸாரை தனிப்பட்ட முறையில் உங்களிடம் நேரிடையாக மன்னிப்புக் கேட்க வைக்கிறோம். எனவே, உங்களுடைய புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்”, என தீபக்கிடம் சமாதானம் பேசுகின்றனர்.

மேலும், ” உமது சமூகத்தைச் சேர்ந்த 50 நண்பர்கள் எமக்கு உண்டு. உங்களைத் தாக்கிய போலீஸ் ஒரு தீவிர இந்து. எனவே, உங்களுடைய நீண்ட தாடியைப் பார்த்ததும் உங்களை முஸ்லிம் என நினைத்து கடுமையாகத் தாக்கிவிட்டார். அவர் எப்போதும் அப்படித்தான். மதக்கலவரங்களின் போது கைது செய்யப்படும் முஸ்லிம்களை அவர் கண்மூடித்தனமாக தாக்கும் வழக்கம் உடையவர்.

எல்லா மதக் கலவரங்களின் போதும் எங்களது காவல்துறை இந்துக்களுக்கு ஆதரவாகவே நடப்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் மனதில் கொண்டு, உங்களிடம் போலீஸ் தவறாக நடந்து கொள்ளவில்லை என எழுதிக் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

இத்தனை வற்புறுத்தல்களுக்குப் பிறகும் தனது புகாரை தீபக் திரும்பப் பெறவில்லை. அதேசமயம் FIR-ம் இன்னும் பதியப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது.

போலீஸார் என்னிடம் மன்னிப்புக் கேட்ட விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான் முஸ்லிமாக இருந்தால் அதற்காக போலீஸ் எந்தக் காரணமும் இல்லாமல் என்னைத் தாக்குவதற்கு என்ன உரிமை உள்ளது?”,

என இந்த தேசத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார் வழக்கறிஞர் தீபக் பந்த்லே.

நன்றி:தி வைர்