குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி நாடு முழுவதும் பற்றி எரிகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தோன்றிய அந்த எழுச்சி என்பதை இந்தியாவின் கடைக்கோடி வரை தன்னிச்சையாக பல்வேறு வடிவங்களில் நாள் தோறும் சங்கிலித் தொடராய் நீண்டு கொண்டிருக்கிறது. அரசிற்கு எதிராக குழுக்கள்., அமைப்புகள், அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் கிளர்ந்தெழும்போது அதனை ஒடுக்கவோ, அவர்களை குறிப்பிட்டு முடக்கவோ, தனிமனித தாக்குதல் தொடுக்கவோ அரசு முனையும். இது வழமையான ஒன்று. இதனை எல்லா அரசுகளும் ஜனநாயகப் போர்வையில் கடைபிடித்தே வந்திருக்கின்றன.
கர்நாடகாவில் போலீசாரால் கொல்லப்பட்ட அப்பாவிகள்:
வடகிழக்கு மாநிலங்களை தொடர்ந்து போராட்டத்தின் வீரியம் தனியாத ஒரு பகுதி உண்டெனில் அந்தப் பெருமை தென் இந்தியாவைச் சாரும். கேரளா,கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் CAA, NRC க்கு எதிரான போராட்டங்கள் மட்டுமல்ல மாநில உரிமை, மத உரிமை, தனிமனித உரிமை , கலாச்சார உரிமை போன்ற பல்வேறு உரிமைகளுக்காக இந்த மாநில மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
இந்த ஐந்து மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி செய்யும் ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. அதனால் தான் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அரசு ஒரு அப்பட்டமான படுகொலையை மைசூரில் நிகழ்த்தியிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய நபர்களின் மீது துப்பாக்கிச்சூட்டை பிரையோகித்து இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது எடியூரப்பாவின் பாஜக அரசு.
ஜனநாயக அமைப்புகள் முடக்கம்?
கர்நாடக அரசு இந்த துப்பாக்கிச்சூட்டையும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தையும் திசை திருப்ப தற்போது புதிய உத்தியை கையாள துவங்கியிருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக அரசுக்கு எதிராக போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் SDPI ஐ தடை செய்ய வேண்டுமென பாஜக அமைச்சர்கள் முதல், சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பேசத் துவங்கியுள்ளனர். இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பஷவராஜ் பொம்மை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
” பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI யோடு இன்னும் சில அமைப்புகளை நாங்கள் தடை செய்ய முடிவெடுத்துள்ளோம். சமீபத்தில் நடந்த சம்பவங்கள., அரசுக்கெதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடுதல் போன்றவற்றில் இந்த அமைப்பினருக்கு தொடர்பு உள்ளது. மேலும் இந்த அமைப்பானது தடை செய்யப்பட்ட “சிமி” அமைப்பின் அரசியல் முகம்” என்றும் அடிப்படை ஆதாரமின்றி பகிரங்கமாக குற்றசாட்டினை முன்வைத்தார்.
ஆதாரங்களை தேடி கொண்டுள்ளோம்:
மேலும் அவர் ” பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI ஐ தடை செய்வதற்காக வலுவான ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த ஆதாரங்களோடு மத்திய அரசை அணுகி தடை கோருவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சட்ட ஆலோசகர்களோடு இதைப் பற்றியான விதிமுறைகள் குறித்தும் நாங்கள் திரட்டிய ஆதாரத்தின் அடிப்படைத் தன்மை குறித்தும் விவாதிப்போம் ” என்றார்.
கர்நாடகா மட்டுமல்ல உத்திரபிரதேச யோகி அரசும் PFI மற்றும் SDPI ஐ தடை செய்ய கோரிக்கை வைத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் பொம்மை தனது பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். நாட்டில் நடந்து வரும் அமைதியான போராட்டங்களை பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் ஒரு அமைப்பினை தடை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் முடிந்துவிடும் என்று நினைக்கிறதா பாஜக என்ற கேள்வியை அரசியல் பிரமுகர்கள் முன் வைக்கின்றனர்.
டெல்லி, பாட்னா, மேற்கு வங்கம் போன்றவற்றில் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து வீதிக்கு வந்து மக்களிடம் பேச அரசு தயாராக இல்லை என்பது போராடும் மக்களின் குற்றச்சாட்டு.
அதற்கு நேர்எதிராக தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ”CAA விடயத்தில் ஒரு அங்குலம் கூட பின்வாங்கமாட்டோம் ” என ஆணவத்தோடு பேசி வருகின்றார். பாஜக வின் சட்டமன்ற உறுப்பினர்களோ “CAA வை எதிர்த்தால் உபியில் நாய் சுட்டதைப் போல உங்களை சுடுவோம் ” என்று வன்முறையாக பேசியிருக்கிறார். மதச்சார்பற்ற ஜனநாக குடியரசு தத்துவங்களை தாங்கிய இந்திய அரசு ஏன் இத்தனை வன்மத்தோடு நடந்து கொள்கிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
உபி அரசு மீது குற்றச்சாட்டு:
கடந்த வாரம் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு டெல்லியில் மாநில அரசுகளின் தடை தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. அந்த சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயலாளர் அணிஸ் அகமது பத்திரிகையாளர்களிடம் அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகள் குறித்து பேசினார்.
அதில் ” உ.பி யில் யோகி அரசு CAA க்கு எதிரான ஆரம்ப கட்ட போரடங்களில் முன்கூட்டியே பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. போராட்டம் காவல்துறையால் கலவரமாக மாற்றப்பட்டு , துப்பாக்கிச்சூடு நடந்து 20க்கும் மேற்பட்டவர்கள் பலியான பின்பு முன்கூட்டியே கைது செய்த எங்கள் அமைப்பினரை முகமூடி அணிவித்து பயங்கரவாதிகளைப் போல பத்திரிகைகள் முன்னால் நிறுத்தி கலவரத்திற்கு காரணமானவர்கள், வன்முறை தூண்டியவர்கள், இவர்களை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறது உ.பி. அரசு” என்றார்.
மத்திய அரசின் தொடர் அவதூறு பிரச்சாரம்:
மேலும் அவர் கூறியதாவது ” மத்திய அரசு தொடர்ச்சியாக “சிமி” அமைப்பினருக்கும் எங்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், சிமி யின் அரசியல் முகம்தான் பாப்புலர் ஃப்ரண்ட் எனவும், சிமி தடைசெய்யப்பட்ட பின் வேறு பெயரில் இவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் தொடர்ச்சியாக பொய்யான குற்றச்சாட்டினை கூறி வருகின்றனர்.
சிமிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிமி தடை செய்யப்பட்டதற்கு முன்பே எங்களது அமைப்பு தொடங்கப்பட்டுவிட்டது. PFI ஆரம்ப அமைப்பான NDF தொடங்கப்பட்டது 1994 ல் ஆனால் சிமி தடைசெய்யப்பட்டது 2001ல். மேலும் அரசு முன்வைக்கும் பொய்குற்றசாட்டுகளை சட்ட ரீதியாக அணுகுவோம் எனவும் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் நடவடிக்கை:
சமீபத்தில் கர்நாடகத்தில் CAA க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பினரை தாக்கியதாக ஆறு நபர்களை கர்நாடகா காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் SDPI கட்சியினர் என்று பெங்களூர் காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்பொழுது கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் பெங்களூர் வடக்கு எம்பியான தேஜஸ்வி யாதவ் மற்றும் வலதுசாரி அமைப்பினர் மீது தாக்குதல் தொடுப்பதற்காக திட்டமிட்டார்கள் என்றார்.
இந்த குற்றசாட்டை வன்மையாக மறுத்திருக்கிறார் SDPI கட்சியின் பெங்களூர் மாவட்ட தலைவரான முஹம்மது ஃஷரீப். காக்னேட் இணையதள செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளிக்கும் பொழுது “பெங்களூர் காவல்துறை முன்வைக்கும் குற்றசாட்டுகள் அனைத்தும் திரிக்கப்பட்டவை, இவை அரசியல் பழிவாங்குதலை தவிர வேறில்லை” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது ” ஆரம்பத்தில் மைசூர் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சேட்டின் மீதான தாக்குதலுக்கு SDPI ஐ குற்றம் சாட்டினர். தற்போது மங்களூர் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட நபர்களோடு எங்களை தொடர்புபடுத்துகின்றனர். இவை எதற்குமே அடிப்படை ஆதாரங்கள் இல்லை. இவை வெறுமென அரசியல் ரீதியாக எங்கள் மீது களங்கம் கற்பித்து முடக்க நினைக்கும் செயல்தான்” என்றார்.
பாஜக வின் நடவடிக்கைகள்:
இந்தியா முழுக்க அரசியல் ரீதியாகவோ, தனிநபர் சார்ந்தோ கேள்விகளையோ, போராட்டங்களையோ யார் எல்லாம் முன்னெடுக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து பலிவாங்கப்படுவது கடந்த 2014ல் இருந்து அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், சிறுபான்மையின மக்கள் மற்றும் அவர்களது அரசியல் அல்லது சமூக அமைப்புகள் தான் குறிவைக்கப்படுகின்றன. டெல்லியில் சந்திரசேகர ஆசாத்தை கலவரத்தை தூண்டினார் என சிறையில் அடைப்பதும், அஸ்ஸாமில் தகவல் உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகாயை நக்சல்களோடு தொடர்புடையவர் என கைது செய்து சிறையில் தள்ளியதும், உபி யில் பயங்கரவாதிகள் என பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்தது உள்ளிட்ட நிகழ்வுகளை இணைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
மறுபுறம் அறிவுஜீவிகள் தொடர்ந்து ஒரேமாதிரியாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்கள் கர்நாடகத்தில் மட்டும் ஏராளமாக நடந்துள்ளன. கல்புர்கி,பன்சாரே,தபோல்கர் மற்றும் கௌரி லங்கேஷ் வரை ஒரே மாதிரியாக, ஒரே அமைப்புதான் சுட்டுக் கொலை செய்துள்ளது. அதனை விசாரிக்கவும், தண்டனை வழங்கவும் கர்நாடக அரசும், நீதிமன்றங்களும் மிகவும் தாமதமாக செயல்படுவதாக பரவலான குற்றசாட்டுகள் உள்ளன.
அந்த பயங்கரவாத செயலை செய்த அமைப்பு சனாதன் சன்ஸ்தா எனும் இந்துத்துவ அமைப்பும் அதைச் செய்தவர்களும் இன்னமும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கைகளும் இல்லை, சிபிசிஐடி,என்ஐஏ விசாரணை இல்லை, பாரபட்சமான போக்கு கடைபிடிக்கப்படுவதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாஜக வை அல்லது அதன் அரசை எதிர்த்தால் இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்றும், அதன் கோட்பாடுகளை எதிர்த்தால் பிரிவினைவாதிகள் என்றும் , பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாங்களுக்கு நேர்எதிராக கருத்தியல் தளத்தில் பயணிக்கும் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் எனவும், அதனை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு எந்திரங்களை பயன்படுத்தி பாஜக செய்ய நினைப்பது எதேச்சதிகாரப் போக்கு. பாஜக மற்றும் இந்துத்துவ கோரிக்கைகளை அரசுகளும், நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும் நிலை தொடரும் எனில் இந்தியாவில் ஜனநாயக அமைப்புகளின் இருப்பு என்பது கேள்விக் குறிதான். இந்தியாவை அதன் சிந்தாந்த நலுவழில் இருந்து காப்பாற்ற வேண்டியதுதான் நம்மிடையே உள்ள ஆகப்பெரிய அரசியல் சவால்.
ஆக்கம்: அஹ்மத் யஹ்யா