ஜார்கண்ட் : பாஜக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நுபூர் சர்மாவுக்கு ஆதரவாகவும், நபிகளாரை இழிவுபடுத்தும் வகையிலும் முகநூலில் கருத்தை பதிவிட்டதற்காகவும் பாஜக தலைவர் அனிஷா சின்ஹாவை ஆதித்யபூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆதித்யபூர் நிஷாந்த் விஹார் காலனியில் வசிக்கும் அனிஷா செரைகேலா-கர்சவான் மாவட்டத்தின் பாஜக செயற்குழு உறுப்பினராக உள்ளார். இதுபோன்ற ஒரு வழக்கில், ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த இளைஞரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனிஷா மீது ஐபிசி பிரிவு 295A (திட்டமிட்டு அல்லது தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டு மத உணர்வுகள் புண்படுத்தல்) மற்றும் 153A ( குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது மொபைல் போன் கைப்பற்றப்பட்டது என செராய்கேலா எஸ்.பி ஆனந்த் பிரகாஷ் தெரிவித்தார். முஹம்மத் நபியைப் பற்றி நுபுர் ஷர்மாவின் இழிவான கருத்துக்கள் ராஞ்சியில் பரவலான வன்முறைபரவ காரணமானதை தொடர்ந்து மாவட்டம் உஷார் நிலையில் உள்ளது.
எந்த ஒரு மத மோதல்களும் ஏற்படாமல் இருக்க சமூக ஊடகங்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். பாஜகவின் செரைகேலா-கர்சவான் மாவட்டத் தலைவர் பிஜய் மஹதோ, அனிஷா சின்ஹா கைது செய்யப்பட்டதற்கு வேதனை தெரிவித்தார், அவர் ஏற்கனவே காவல்நிலையத்தில் தனது “தவறுக்கு” மன்னிப்பு கேட்டதாகக் கூறினார். பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அரசின் உத்தரவின் பேரில் காவல்துறையினரால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதேபோல, முஹம்மத் நபியைப் பற்றி சமூக ஊடகங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவைப் பதிவேற்றியதற்காக உபி யை சேர்ந்த 25 வயதான ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஸ்ரா பகுதியில் உள்ள குரேஜி கிராமத்தில் வசிக்கும் பஜ்ரங் சிங் ராஜ்புத், ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் பதிவை பதிவேற்றியதாக ராஸ்ரா வட்ட அதிகாரி ஷிவ் நரேன் வைஷ் தெரிவித்தார்.
ட்விட்டரில் காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஒரு நபர் வலியுறுத்தியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது என வைஷ் கூறினார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்புத்தை கைது செய்தனர்.