Activists Arrests Islamophobia Journalist Muslims Uttar Pradesh

‘மீண்டும் 24 மணி நேரமாக உணவு வழங்கப்படவில்லை’: சித்திக் கப்பனின் மனைவி வேதனை ..

யுஏபிஏ குற்றம் சாட்டப்பட்டவரும், கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளருமான சித்திக் கப்பன், மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட நாளில், அதற்கு முன்பான 24 மணி நேத்தில் அவருக்கு எந்த உணவும் வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் மற்றும் வக்கீல் தி க்விண்ட் ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர்.

அவரது மனைவி 37 வயதான ரைஹானா சித்திக்கிடம் பேசினோம், இவ்வாறு நடப்பது இது முதல் முறை அல்ல என்று கூறினார். அவரது வழக்கறிஞர் வில்ஸ் மேத்யூஸையும் நாங்கள் அணுகினோம்,இவ்வாறு மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் நீதிமன்றத்தில் இதற்க்கென ஒரு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக கூறினார். “ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கான உரிமை தான் பிரதானமான உரிமை , அதுவே பறிக்கப்படுமானால் எல்லாம் போய்விட்டது” என்று மேத்யூஸ் தி க்விண்ட் ஊடகத்திடம் கூறினார்.

உணவு வழங்கப்படாமல் கொடுமை:

“ஒரு நபருக்கு சிறையில் மூன்று முறை உணவு வழங்கப்படுகிறது. காலை 7:30 மணியளவில், அது தேநீர் மற்றும் சில பன் மற்றும் பட்டாணி மட்டுமே, பின்னர் காலை 11:00 மணி மற்றும் மாலை 5:00 மணிக்கு. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு உணவளிக்கப்பட்ட சித்திக்கிற்கு, மறுநாள் மாலை 6:00 மணி வரை உணவளிக்கப்படவில்லை. ஏப்ரல் 2 ஆம் தேதி காலை அவருக்கு எதையும் உணவளிக்காமல், அவருக்கு எந்த உணவும் வாங்காமல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். ” என்கிறார் சித்திக்கின் மனைவி ரைஹானா.

அவர் ஒவ்வொரு நாளும் தனது கணவருடன் 2 நிமிடங்கள் பேச மட்டுமே அனுமதி. இந்த 2 நிமிடங்களில் அவர்களது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் பேசி முடிக்கவேண்டும்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், ஏப்ரல் 3 ஆம் தேதி காலையில் அவர்கள் பேசியபோது கப்பன் தனது உடல்நிலை சரி இல்லை என்று கூறியுள்ளார்.

சித்திக் வெளிப்படுத்துவதில்லை:

“அவரது சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. இப்படி ஆகும் போது அவரது வாய் மிகவும் வறண்டு போகும், அவரது உடல் பலவீனமடைகிறது, மேலும் அவர் நடுங்கத் தொடங்குகிறார். அவருக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாவிட்டால் அவரது மருந்து வேலை செய்யாது. ஏற்கனவே கொடுக்கப்பட்ட உணவில் வைட்டிமன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை, அதையும் கூட கொடுக்காவிட்டால் மருந்து எவ்வாறு வேலை செய்யும் ? அவர் வெளிப்படையாக இதையெல்லாம் சொல்வதில்லை.. ”என்கிறார் சித்திக்கின் மனைவி ரைஹானா.

இது முதல் முறை இல்லை:

இவ்வாறு நடப்பது இது முதல் முறை இல்லை, இது இரண்டாம் முறை “கடந்த முறை அவர்கள் அவருக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லை.” இதை பற்றி வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார் ரைஹானா. ரைஹானா சொன்னதை மேத்யூஸ் உறுதிப்படுத்தினார், மேலும், “அவர் சொல்வது உண்மையே, அவர் நீரிழிவு நோயாளியாக இருக்கும் நிலையில் அவருக்கு 24 மணி நேரம் உணவு மறுக்கப்பட்டது. இவை ஒரு நபரின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகள், நீரிழிவு நோயாளிக்கு நீண்ட நேரங்கள் உணவு வழங்கப்படவில்லை எனில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.. வாழ்வதற்கான உரிமையே போய்விட்டால் எல்லாம் போய்விட்டது. ” என்றார் வழக்கறிஞர்.

எனினும் சித்திக் சொல்வதெல்லாமே பொய், அவர் சொல்வதற்கெல்லாம் ஒரு மதிப்பும் இல்லை என சிறை அதிகாரிகள் கூறி முடித்து விடுகின்றனர்.