Corporates Tribals

ஒடிசாவில் வேதாந்தா குழுமத்தை எதிர்த்து போராடும் மலைவாழ் மக்கள்!45 பேர் மீது வழக்கு பதிவு!

கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிரான பழங்குடி போராட்டம் ஒடிசாவின் கோடிங்கமலி மலையின் 22 கிராமங்களில் தீவிரமடைந்து வருகிறது. ஊர் மக்கள் பாக்சைட் சுரங்கவேலைகலை நிறுத்துமாறு ஐந்து நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து கிராமசபையின் புதிய கூட்டம் தொடங்கவுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்ப்பாட்டங்கள் வீரியம் அடைந்து வருவதால் இதனை தடுக்கும் விதமாக அம்மாநில அரசாங்கம் அப்பகுதியில் 45 மலைவாழ் மக்கள்(பழங்குடியினர்) மீது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்ததாக வழக்குகளை பதிவு செய்துள்ளது.

அப்பகுதியில் பழங்குடியினருடன் பணியாற்றி வரும் ஆர்வலரும் பத்திரிகையாளருமான ரபிசங்கர் கூறுகையில், “பழங்குடியினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதாக காவல்துறையினரிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் 45 பெயர்கள் உள்ளன.ஆனால் வருங்காலத்தில் இப்பட்டியலில் எவர் வேண்டுமானாலும் இணைக்க பட்டு பட்டியல் நீட்டிக்கப்படலாம்.பழங்குடியினரை பயமுறுத்துவதற்கு அரசு முயற்சிக்கிறது என்பதையே இந்த முயற்சி காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

மக்கள் போராட்டம் :

லக்ஷ்மிப்பூர் அருகே சுரங்கங்களுக்கு செல்லும் சாலையை கிராம மக்கள் தற்போது தடுத்து வருவதால்,கோடிங்கமலியில் இருந்து கக்ரிகும்மா ரயில் நிலையத்திற்கு பாக்சைட் கொண்டு செல்வதை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களால் சுரங்க நடவடிக்கைகளும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

“சுரங்கப் பொருள்களைக் கொண்டு செல்லும் இருநூறுக்கும் மேற்பட்ட டிப்பர்கள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன, சுரங்க முகாமில் நிறுத்தப்பட்டிருந்தவர்கள் இப்போது அனைவரும் வீடு திரும்பிவிட்டனர் அல்லது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.” என்று ரபிஷங்கர் தெரிவித்தார்.

மக்கள் தொடர் போராட்டம்

உள்ளூர்வாசிகளை சமாதானப்படுத்த, காவல்துறை அதிகாரிகளும், தாசில்தார்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினரை சந்திக்க வந்திருந்தனர். இருப்பினும், இது குறித்து தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதுடன், போராட்டங்களை நிறுத்தவும் , பழங்குடியினரை சமாதானப்படுத்தவும் முயன்றனர். சுரங்கங்கள் தங்கள் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளன, தங்கள் வயல்களையும் ஆறுகளையும் மாசுபடுத்தியுள்ளன, எந்தவொரு வேலைவாய்ப்பையும் உருவாக்கவுமில்லை என்று குற்றம் சாட்டி உள்ளூர்வாசிகள் இப்பகுதியில் உள்ள அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கின்றனர்.

அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்துவது தொடர்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று மக்கள் போராடி வருகின்றனர். சுரங்க நடவடிக்கைகளின் சுற்றளவு குறித்த தெளிவையும் அவர்கள் நாடுகின்றனர். உள்ளூர்வாசிகள் தங்கள் நிலங்களை விட்டு வெளியேற மாட்டார்கள் என்றும், தங்கள் சொந்த நிலங்களில் பாதுகாப்புக் காவலர்களாக நிற்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

ஒடிசா சுரங்கக் கழகம் ஒரு தனியார் நிறுவனமான மைட்ரி இன்ஃப்ராவுக்கு வழங்கிய குத்தகைக்காக வேதாந்தா குழு இந்த திட்டத்தை நடத்தி வருகிறது. இந்த திட்டம் 2018 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. கோடிங்கமலி பாக்சைட் சுரங்கத்திற்கான அனுமதிகளைப் பெற்றவுடன், ஒடிசா அரசு புதிய பாக்சைட் இணைப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. ஒடிசா சுரங்கக் கூட்டுத்தாபனம் இந்திய சுரங்க நிறுவனமான வேதாந்தாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, கோடிங்கமலியில் இருந்து பெறப்பட்ட பாக்சைட்டில் 70% கலஹந்தி மாவட்டத்தில் லாஞ்சிகரில் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வேதாந்தாவின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற பொய்யான வாக்குறுதி :

வேதாந்தா இதற்கு முன்னர் பிரேசில், கினியா போன்ற நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய நாடுகளிலிருந்தும் பாக்சைட்டை இறக்குமதி செய்து வந்தது. 2017 ஆம் ஆண்டில், கோடிங்கமலி மலைப்பிரதேசத்தில் 435 ஹெக்டேர் வன நிலத்தில் புதிய பாக்சைட் சுரங்கத்தை உருவாக்க ஒடிசா சுரங்கக் கழகம் வன அனுமதி பெற்றது.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கும் வாக்குறுதியின் பேரில் தங்கள் நிலம் பறிக்கப்பட்டதாக கோடிங்கமலி மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Source:Newsclick.in