கர்நாடகாவில் பிரபல தலித் எழுத்தாளரும் ஆர்வலருமான தேவனூர் மகாதேவா ஆர்எஸ்எஸ் பற்றி எழுதியுள்ள புத்தகம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வலதுசாரிகள் இதை ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிரான பிரச்சாரம் என்கிறார்கள். “ஆர்எஸ்எஸ் ஆலா அகலா” (ஆர்எஸ்எஸ், அதன் ஆழமும் அகலமும்) என்ற புத்தகத்தின் விற்பனை கர்நாடக மாநிலத்தில் சாதனை படைத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா வியாழன் அன்று மகாதேவாவுக்கு ஆதரவாக, “ஆர்எஸ்எஸ் பற்றி அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
நூலை தடை செய்யத்துடிக்கும் வலதுசாரிகள்:
இந்நூலை தடை செய்வது குறித்தும், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 72 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் வெளியிட தேர்தெடுக்கப்பட்ட நேரம் குறித்து பாஜகவினர் கேள்வி எழுப்புகின்றனர். 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசியல் உள்நோக்கத்துடன் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஒரு தனி அத்தியாயம் உள்ளது. அவரை “உத்சவ் மூர்த்தி” என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் உண்மையான கட்டுப்பாடு நாக்பூர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் தான் உள்ளது என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
“பகவத் கீதை அடிமைத்தனத்தின் ஒரு கருவி” என்று கூறியுள்ள நூலாசிரியர் பெரும்பாலான ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் ‘மனுவாதிகள்’ என தெரிவித்துள்ளார். மேலும் ஆர்எஸ்எஸ் இந்திய அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும் தேவனூர் தெரிவித்துள்ளார்.
சூடு பிடிக்கும் விற்பனை:
புத்தகம் வெளியிடப்பட்டு பத்தொன்பது நாட்களுக்குள், 70,000 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளன.மேலும் தேவை அதிகரித்து வருகிறது. எனவே இந்த புத்தகத்தை மொத்தம் ஆறு வெளியீட்டாளர்கள் அச்சிட்டு வருகின்றனர்.பாசிச பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷின் பெயரிடப்பட்ட கௌரி மீடியா டிரஸ்டும் வெளியீட்டாளர்களில் ஒருவர்.
அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், பதிப்பாளர்கள் புத்தகத்தை அதிக அளவில் அச்சிட்டு வருகின்றனர். கன்னட பதிப்பு மட்டுமே இப்போது கடைகளில் கிடைக்கிறது, மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புகள் நடந்து வருகின்றன. நூலாசிரியர் தனது படைப்பின் மீது உரிமை கோரவில்லை என்பது கூடுதல் தகவல்.
தலித் எழுத்தாளர் மீது அவதூறு:
மைசூர் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா இந்த புத்தகத்தை வசைபாடி நிருபர்களிடம் கூறும்போது, “அவர் குசுமபாலேயை எழுதிய பிறகு, அவரிடம் சில படைப்பாற்றல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது ஆர்எஸ்எஸ் பற்றிய புத்தகம் எழுதி அவர் தனது மரியாதையை கெடுத்து கொண்டார். புத்தக தலைப்பில் கூறுவது போல் ஆர்எஸ்எஸ்-ஆலா மற்றும் அகலா (ஆழம் மற்றும் அகலம்) பற்றி எதுவும் இல்லை, அவர் இந்த புத்தகத்தை ஒரு காங்கிரஸ் ஆளு (வேலைக்காரன்) வாக எழுதியுள்ளார்” என கூறியுள்ளார்.
கர்நாடகா முன்னாள் முதல்வர் ஆதரவு:
இதைத் தொடர்ந்து, விருது பெற்ற எழுத்தாளர் தேவனூருக்கு எதிரான கருத்துக்கு கர்நாடக தலித் சங்கர்ஷா சமிதி (கேடிஎஸ்எஸ்) மற்றும் தலித் நல அறக்கட்டளை கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்த பின்னரே தேவனூர் புத்தகத்தை எழுதியுள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். “யாராவது உண்மையைச் சொல்லத் துணிந்தால் ஆர்எஸ்எஸ் கோபம் அடையும். அவர்கள் உண்மையை விரும்புவதில்லை. . தேவனூர் மகாதேவா மீது புகார் அளிப்பது கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமையைத் தடுக்கும் செயல்” என்றும் அவர் கூறினார்.
தேவனூர் பதிலடி:
பாஜக மற்றும் ஊடகங்கள் ஒன்று சேர்ந்து கொண்டு தேவனூரின் இந்த புத்தகம் இந்து மதத்தின் மீதான அவதூறு என பொய்யை கூறி வர, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைகளுக்கு பதிலளித்த மகாதேவா,
“அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை கேள்வி கேட்பதற்கு பதிலாக, பெரும்பாலான ஊடக நிறுவனங்கள் இன்று அரசாங்கத்தைப் புகழ்வதிலும், ஆதரிப்பதிலும் மும்முரமாக உள்ளன. யாராவது அரசை விமர்சித்து கேள்வி கேட்டால், அவர்கள் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்” என்று மகாதேவா கூறினார்.
புத்தகத்தின் அழைப்பு:
அனைத்து முற்போக்கு சக்திகளான எதிர்க் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்ஸின் நாசகார திட்டத்தைத் தகர்க்க வேண்டிய மகத்தான பொறுப்பை தங்கள் தோள்களில் சுமந்திருப்பதை நினைவூட்டி மகாதேவா புத்தகத்தை முடிக்கிறார்.
அற்ப அரசியலுக்கு அப்பால் சிந்திக்கவும், தங்களுக்குள் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்றவும், அன்பு, இரக்கம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் நமது சமூகத்தை கூட்டாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று நூலாசிரியர் கேட்டுக்கொள்கிறார்.
தனிப்பட்ட அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும், வாழ்வதற்கான அன்றாடப் போராட்டங்களிலும் இன்னமும் தொலைந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு, இந்தப் புத்தகம் ஒரு அவசர அழைப்பை விடுத்துள்ளது. பிரிவினைவாத சக்திகள் ‘அதர்மத்தை’ ‘தர்மம்’ என்றும் சமூக அநீதியை சமூக நீதி எனவும் முன்வைக்கும் இன் நேரத்தில், அதனை அடையாளம் காணவும், எதிர்த்து நின்று ஒன்றிணைய வேண்டும் என்ற தெளிவான அறைகூவலை 130+ கோடி இந்தியர்களுக்கு விடுத்துள்ளது இந்த புத்தகம்.