Delhi Pogrom Lynchings Muslims

டில்லி இனப்படுகொலை: “எனது கழுத்தில் கயிறை கட்டி, குப்பை கால்வாயில் வீசி சென்றனர்”

கீழே தரப்பட்டுள்ளது சர்வதேச ஊடகமான வைஸ் நியூஸ் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு ..

புது தில்லியின் தெருக்களில் துணி விற்பவர் இம்ரான் கான். வியாபாரம் முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரைத் தடுத்து அவரது பெயரைக் கேட்டது. அவர் இம்ரான் என -எளிதாக அடையாளம் காணக்கூடிய முஸ்லீம் பெயரை- கூறியவுடன் பனிரெண்டுக்கும் அதிகமான நபர்கள் அவரை இரும்பு கம்பிகள், சுத்தியல்கள் மற்றும் கம்புகளால் கொடூரமாக தாக்கியுள்ளனர்..

அதிக அளவில் இந்துக்கள் வசிக்கும் சிவ் விஹாருக்கு அருகில் உள்ள குப்பை நிரப்பப்பட்ட கால்வாயில் இரண்டு மணி நேரம் கழித்து, இம்ரான் கான் கண் விழித்தார்.

“அவர்கள் என் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டினார்கள், நான் இறந்துவிட்டதாக நினைத்தார்கள். பின்னர் நான் கால்வாயில் வீசப்பட்டேன்..” என்று சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி இம்ரான் கான் வைஸ் நியூஸிடம் கூறினார்.

30 வயதான, இரு குழந்தைகளுக்கு தந்தையான இம்ரான், தனது வீட்டிலிருந்து அரை மைல் தூரத்தில் இருந்தார், அவர் இருட்டில் தடுமாறி கொண்டு, இரத்தம் கசிந்த தலையை இரு கைகளாலும் மூடி கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவரது மனைவியும் தாயும் அவரது 5 வயது மகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் அச்சத்தில் காத்திருந்தார்கள். இம்ரானின் குடும்பத்தாரால் அவர்களது வீட்டிலிருந்து ஒரு கும்பல் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடுவதைக் கேட்க முடிந்தது.

Delhi
இம்ரான் கான்

வெறியாட்டம்:

போராட்டக்காரர்களை அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவு கிடைக்கப்பெற்று ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இந்து கும்பல்கள் சிவ் விஹார் உட்பட தெருக்களைக் கைப்பற்றின. அப்போதிலிருந்து அடுத்த 4 நாட்களுக்கு முகங்களை முகமூடிகளால் மூடி கொண்டு, ஹெல்மெட் அணிந்து, மக்களை அடித்து கொலை செய்து, வீடுகள், கடைகள், பள்ளிகள், மசூதிகள் என அனைத்தைம் எரித்தனர். சில முஸ்லிம்கள் எதிர்த்து போராடினர்.

அந்த நான்கு நாட்களில், பல இந்துக்கள் உட்பட குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டனர், 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிப்ரவரி 24 அன்று இம்ரான் கான் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட நிலையில் வீட்டிற்க்கு போய் சேர்ந்திருந்தாலும், அவரது குடும்பத்தினரால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை; அந்த கும்பல் இன்னும் வீதிகளில் சுற்றித் திரிந்து, மக்களை அச்சுறுத்தி கொண்டும் வீடுகளை எரித்து கொண்டும் இருந்தது.

Delhi
கொடூரமாக தாக்கப்பட்ட இம்ரானின் தலை ..
Photo: FAHAD SHAH/VICE NEWS.

கொடூரமான நிலை:

“நாங்கள் இரண்டு நாட்கள் சிக்கிக்கொண்டோம் – என் காயங்களுக்கு சிகிச்சையளிக்க யாரும் இல்லை. என் அம்மா என் தலையில் துணியால் கட்டுப்போட்டார். வீட்டில் உணவு மற்றும் பால் தீர்ந்து விட்டது, எனவே குழந்தைகளுக்கு உணவளிக்க சப்பாத்தியை தண்ணீரில் முக்கி கொடுத்தோம்” என்கிறார் இம்ரான்.

“நாங்கள் மிகவும் அச்சத்தில் இருந்தோம், நாங்கள் உள்ளே இருப்பதை அவர்கள் அறிந்திருந்தால் அவர்கள் எங்களைக் கொன்றிருப்பார்கள். ஒரு துணியில் ஊஞ்சலை போல ஆக்கி எனது குழந்தையை விளையாட்டில் ஆழ்த்தி அழுக செய்வதை தடுத்து வந்தேன். நாங்கள் ஒருவழியாக வெளியேறிய பிறகு அந்த பகுதியில் அனைத்தும் எரித்து நாசப்படுத்த பட்டிருந்தது. கேஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை எங்களால் கேட்க முடிந்தது.” என கூறுகிறார் இம்ரான்.

ஒரு வழியாக மருத்துவமனையில்..:

பிப்ரவரி 27 அன்று கானின் குடும்பத்தினர் அவரை அல் ஹிந்த் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு மூளையதிர்ச்சி மற்றும் மண்டை ஓடு எலும்பு முறிவு இருப்பது கண்டறியப்பட்டது, மேலும் அவரது தலை மற்றும் உடலில் ஆழமான வெட்டுக்கள் இருந்தன.

அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கவில்லை, ஆனால் இம்ரான் முழுமையாக குணமடைய எவ்வளவு செலவாகும் என்று அவருக்கு தெரியவில்லை. அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கள் உடமைகளை மீட்டெடுக்க வீட்டிற்குச் செல்லவும் கூட பயப்படுகிறார்கள்.ஒரு நீண்ட காலத்திற்கு, இம்ரான் மீண்டும் வியாபாரம் செய்யும் நிலையில் இல்லை..

இனப்படுகொலையின் போது செயல்பட்ட மருத்துவமனை:

தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பிறகும் இம்ரான் அல் ஹிந்த் மருத்துவமனையில் இருக்கிறார், வேறொரு காயமடைந்த இளைஞருடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்.கலவர சமயத்தில் 15 படுக்கைகள் மற்றும் மூன்று மருத்துவர்களைக் கொண்ட இந்த சிறிய மருத்துவமனை, அனைத்து பகுதிகளிலிருந்தும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே மருத்துவமனையாக அல் -ஹிந்த் மாறியது.

மருத்துவர் கூறுகிறார் :

“மருத்துவமனை கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உடல் பாகங்கள் சுற்றி கிடந்தன; சிலரின் கைகள், விரல்கள் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. எல்லா இடங்களிலும் இரத்தம் இருந்தது; அன்றைய சமயத்தில் எனது உடை இரத்தத்தில் நனைந்திருந்தது.” என டாக்டர் அன்வர் கூறுகிறார்.

மருத்துவமனையின் நிலை:

ஏராளமான மக்கள் மாடியில் சிதறிக் கிடந்தனர். மருத்துவமனையில் போதுமான IV ஸ்டாண்டுகள் இல்லை, எனவே அவர்கள் தூண்களுக்கு இடையில் ஒரு கயிற்றைக் கட்டி, நோயாளிகளுக்கு வழங்குவதற்காக அதிலிருந்து திரவப் பைகள் தொங்கவிட்டார்கள்.

“இப்படிப்பட்ட மோசமான படுகொலைகள் நடக்கும் என எவரும் நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை; நாங்கள் தலைநகரில் வசிப்பவர்கள், ” என்று டாக்டர் அன்வர் கூறினார்.

வெள்ளிக்கிழமை ஒரு மருத்துவர் இம்ரான் கானின் காயங்கள் குணமடையவில்லை என்றும், அவரை அதிக வசதிகளுடன் கூடிய மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

அரசின் மெத்தன போக்கு:

அல் ஹிந்திற்கு வந்தவர்களில் பலர் பலத்த காயமடைந்திருந்தனர், சிறந்த வசதியுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவேண்டிய நிலையில் அவர்கள் இருந்தனர் என டாக்டர் அன்வர் கூறினார். ஆனால் அரசாங்கம் எந்த வித வழிவகையயும் செய்யாததால் தவிர்க்கப்பட்டிற்க கூடிய பல மரணங்களும் கூட நிகழ்ந்தது.

பிப்ரவரி 25 அன்று, போலீசார் ஆம்புலன்ஸ்கள் செல்வதைத் தடுத்தனர். டாக்டர் அன்வர் சுகாதாரத் துறையில் தனக்குத் தெரிந்த அனைவரையும் அழைத்தார், ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மருத்துவ ஊழியர்களுடன் சிலரை நடந்தே செல்ல நான் அறிவுறுத்தினேன் எனினும் காயமடைந்தவர்களை 45 நிமிடங்களுக்கு மேல் போலீசார் காத்திருக்கச் செய்தார்கள், வழி விடவில்லை.

நீதிமன்ற உத்தரவு:

சுமார் நான்கு மணி நேரம் கழித்து, ஒரு உள்ளூர் நீதிமன்றம் “காயமடைந்தவர்களை அருகிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக அனுப்புவதை உறுதி செய்யுமாறு” காவல்துறைக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது, அதுவும் அன்று இரவு 9:30 மணியளவில் நாங்கள் சமூக வலைத்தளங்களில் விஷயத்தை கொண்டு சேர்த்தபிற்பாடு தான் நடந்தது.

சவக்கிடங்கிற்கு வெளியே ..:

உள்ளூர் மருத்துவர்கள், துணை மருத்துவர்களும், மருத்துவ விநியோக கடை உரிமையாளர்கள் என பலர் அல் ஹிந்திற்கு வந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர். வன்முறை இறுதியாக 27 ஆம் தேதி முடிந்தது. இறந்தவர்களின் உடல்களை பெற்று கொள்ள அல் ஹிந்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள 2,500 படுக்கைகள் கொண்ட குரு தேக் பகதூர் மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு வெளியே குறைந்தது ஒரு டஜன் குடும்பங்கள் காத்திருந்தன.

சிவ் விஹாரில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட 58 வயதான அன்வர் கஸ்ஸரின் குடும்பம் அவற்றுள் ஒன்று. கஸ்ஸரின் மகள், குல்ஷன், 27, அவரது கணவர், பார்வையற்றவர், மற்றும் அவரது சகோதரர் சலீம், சவக்கிடங்கு கதவுகளுக்கு வெளியே ஒருவருக்கொருவர் ஆறுதல் கூடி கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

தொடரும்…