மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செவ்வாய்க்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் மோஹித் கம்போஜ் பாரதியா மீது மோசடி புகாரை பதிவு செய்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து ரூபாய் 52 கோடி கடனை பெற்ற நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், பாஜக இளைஞர் பிரிவின் முன்னாள் மும்பை யூனிட் தலைவர் மோஹித் என்று வங்கியின் மேலாளர் தெரிவித்தார். கடனைப் பெறும்போது மேற்கோள் காட்டப்பட்ட நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்கள் அந்தத் தொகையை வேறு நோக்கத்திற்காக செலவிட்டதாக மும்பை காவல்துறை ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
மோஹித் 2013 இல் பாஜகவில் சேர்ந்தார். 2014 மாநில சட்டமன்றத் தேர்தலில், திண்டோஷி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அவருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது, ஆனால் சிவசேனாவின் சுனில் பிரபுவிடம் தோல்வியடைந்தார்.அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, மோஹித்தின் சொத்து மதிப்பு ரூ.253.53 கோடி.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்) மற்றும் 409 ஆகியவற்றின் கீழ் மோஹித் மற்றும் நிறுவனத்தின் மற்ற இரு இயக்குநர்களுக்கு எதிராக எம்ஆர்ஏ மார்க் காவல்துறையால் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இருப்பினும், தன் மீதான வழக்கு ஜோடிக்கப்பட்டதாகவும், மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேயின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டதாகவும் மோஹித் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் பாஜக தலைவர் தெரிவித்தார்.