கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ‘மிகவும் பாதுகாப்பற்றவை’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழக்கு விசாரணை ஒன்றில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார்.இதை தொடர்ந்து கிறிஸ்தவ சங்கங்கள், சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் , சில சட்டத்துறை வல்லுனர்கள் இக்கருத்தை விமர்சனம் செய்திருந்தனர். தற்போது இக்கருத்தை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை, தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றின் மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் பெங்களூரு, கூர்க் போன்ற ஊர்களுக்கு ‘கல்வி சுற்றுலா’ அழைத்து செல்லப்பட்டனர். மாணவர்களுடன் 7 பேராசிரியர்கள் கல்வி சுற்றுலாவிற்கு சென்றனர். சுற்றுலாவிற்கு பின் , 34 மாணவிகள் ஒன்றிணைத்து 2 பேராசிரியர்கள் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற விசாரணையில் பணிநீக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேராசிரியர்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி பேராசியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் உயர்நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேசாரியரின் மனுவை தள்ளுபடி செய்தும் பணி நீக்கம் செல்லும் என்றும் உத்தரவிட்டார்.
மேலும் தன்னுடைய உத்தரவில், பிற மதத்தினரை கிறிஸ்துவ மதத்தில் இணைக்க மிஷனரீகள் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன எனவும், இருபாலர் படிக்கும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் தெரிவித்திருந்தார்.
நல்ல கல்வியை வழங்கினாலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், நல் ஒழுக்கத்தை போதிக்கிறதா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது எனவும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவை கூடியபோது வழக்குக்கும், இந்த கருத்துக்கும் எந்த தொடர்பில்லை என கிறிஸ்தவ கல்லூரி(mcc) தரப்பில் நீதிபதி வைதியநாதன் முன் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முறையீட்டை ஏற்று நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து 32 வது பாராவில் தான் குறிப்பிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்தை நீக்குவதாக தன்னுடைய உத்தரவில் தெரிவித்தார்.