அசாம்: பாஜக ஆளும் அசாமில் மொய்ராபரி பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட முப்தி முஸ்தபா நடத்தி வந்த ஜாமியுல் ஹுதா மதரஸா அதிகாரிகளால் வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. இந்த மதரஸா 2018 முதல் செயல்பட்டு வந்தது.
பங்களாதேஷை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, மொய்ராபரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மொரிகாவ்ன் மாவட்டத்தின் சஹாரியா கிராமத்தில் இருந்து முப்தி முஸ்தபா காவல்துறையினரால் ஜூலை 28 அன்று கைது செய்யப்பட்டார்.
மோரிகான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபர்ணா இதனை ANI ஊடகத்திடம் தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் யுஏபிஏ சட்டத்தின் கீழ் மதரஸா இடிக்கப்பட்டதாகவும், இந்த மதரஸாவில் படித்து வந்த 43 மாணவர்கள் வெவ்வேறு பள்ளிகளில் சேர்க்கப்பட்டதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.
அன்சார் அல்-இஸ்லாமுடன் தொடர்புடையதாகக் கூறி , 10 முஸ்லிம்களை மாநிலத்தின் மோரிகான் மற்றும் பர்பேட்டா மாவட்டங்களில் இருந்து ஜூலை 28 அன்று அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
முஸ்லீம்களின் வீடுகள் மற்றும் அவர்களது சொத்துக்கள் தொடர்ந்து புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது, பொய் வழக்குகள் மூலம் சிறையில் அடைக்கப்படுவது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையாகி உள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.