பாட்னாவில் திங்களன்று “ரோஜ்கர் மற்றும் சிக்ஷா” (வாழ்வாதாரம் மற்றும் கல்வி) கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது இடதுசாரி கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது பொலிஸ் நடத்திய லாதிச்சார்ஜில் பலர் பலத்த காயமடைந்தனர். சிபிஐ (எம்.எல்) இன் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பின் இந்த எதிர்ப்பு ஊர்வலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து தீர்வு காண பீகார் சட்டமன்றத்தை முற்றுகையிட சென்று கொண்டிருந்த நிலையில் இந்த தடியடி நடத்தப்பட்டுள்ளது.
பாட்னாவின் மையப்பகுதியான காந்தி மைதானம் அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கி, சட்டமன்றத்தை முற்றுகை செய்திட அமைதியான எதிர்ப்பு அணிவகுப்பைத் தொடங்கினர்.
ஆனால் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களும் மாணவர்களும் ஜே பி கோலம்பருக்கு அருகே வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டனர், இது போராட்டக்காரர்களை கோபப்படுத்தியது, பின்னர் அவர்கள் பொலிஸ் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்களிட்டனர்.
போராட்டக்காரர்களைத் தடுக்க , பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். தொடர்ச்சியாக கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் நீர் பீரங்கிகள் பிரயோகித்தும் கூட , இளைஞர்கள் பின்வாங்கவில்லை. எனவே, போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
போலீசாரரின் தடயடியால், பல இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தலை, கால்கள், கைகள், தோள்கள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.காயமடைந்த போராட்டக்காரர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசின் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிபிஐ (எம்.எல்) இன் இளைஞர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த மாதம் மாநில சட்டமன்றத்தை முற்றுகையிடுவதற்கான திட்டத்தை அறிவித்தன, கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 19 லட்சம் வேலைகள் வழங்கப்படும் என்று நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ அரசாங்கம் வாக்குறுதியளித்ததை நினைவுபடுத்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தியதாக சிபிஐ (எம்.எல்) தெரிவித்துள்ளது.
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.