வாரணாசி தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மோடிக்கு அலஹாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எல்லையில் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மோசமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார் , எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ்பகதூர். இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்கிடையில் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவர் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எல்லைப் பாதுகாப்பு படையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான சான்றிதழை இணைக்கவில்லை என்று கூறி தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்கில் மோடியை விமர்சனம் செய்து வந்தனர்.
யாதவின் வேட்புமனு மறுக்கப்பட்டது குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகின ஆனால் இவை பெருமளவில் மக்களை சென்றடையவில்லை.
கடந்த மே 9 அன்று, யாதவின் வேட்புமனுவை ரத்து செய்வதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து யாதவ் உச்சநீதி மன்றத்தை நாடினார் ஆனால் நீதிமன்றமோ வழக்கை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தவறு என்றும், வாரணாசி தொகுதி தேர்தல் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னர், தனது தரப்பை எடுத்துரைக்க யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதனை அடுத்து , வாரணாசி தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் என்ற அடிப்படையில், பிரதமர் மோடிக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
.