இந்தியாவில் சமீப காலமாக கும்பல் வன்முறைகளும், காட்டுமிராண்டி தாக்குதலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இதை எதிர் கொள்ளும் விதமாக சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவதற்கும் , இவ்வாறான கும்பல் வன்முறை தாக்குதல்களை ஆவணப்படுத்துவதற்கும் ஒரு உதவித் தொலைபேசி எண்ணை ( ஹெல்ப்லைனை) அறிமுகப்படுத்திஉள்ளனர்.
தொடர் கும்பல் வன்முறை சம்பவங்களைத் தடுக்க இந்தியாவின் மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறியதால் இந்த முயற்சி தேவைபடுகிறது என்று இந்தியா முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் (United Against Hate -UAH ) வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிரான ஒன்றிணைந்த குழு என்ற அமைப்பின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.
ஹெல்ப்லைன் அறிவிப்பு :
தலைநகர் புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் நதீம் கான் “நாட்டில் அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்கள் மற்றும் வெறுப்புக் குற்றங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 1800-3133-60000 என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைனை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்” என்று கூறினார். மேலும் இந்த உதவி எண் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் அமைத்துள்ளோம் என்று கூறினார்.
கும்பல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க கிட்டத்தட்ட 100 இந்திய நகரங்களில் அதன் செயற்பாட்டாளர்கள் பணியாற்றுவார்கள் என்று யுஏஎச் (UAH ) தெரிவித்துள்ளது.இவ்வாறான கும்பல் வன்முறைகளில் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் பெரும்பாலோர் முஸ்லிம்களே. இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள்தொகையில் 14 சதவீதத்தினர் முஸ்லிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
“இதுபோன்ற தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நீதிமன்றங்களில் அவர்களுக்கு நீதி கிடைக்க செய்யவும் நாங்கள் போராடுவோம் ” என்று திரு. கான் கூறினார். மேலும் “மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து அதிகபட்சமாக அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகின்றன் . இவை வளர்ந்துவரும் வன்முறை கலாச்சாரத்தை எந்த விதத்திலும் தடுத்து விட வில்லை” என்று கூறினார்.
இதுபோன்ற ஒரு முயற்சி இன்றைய காலகட்டத்தில் “ஒரு கட்டாயமான தேவை” என்று இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள், சமூக சேவையாளர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தெரிவித்தனர்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான திரு.அபூர்வானந்த் கூறுகையில்: இவர்கள் முஸ்லீம்கள், தலித்துகள், கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தால் தான் “இந்து வலதுசாரி கும்பல்களால்” குறிவைக்கப்படுகிறார்கள் என்றார்.
“இது தான் இன்றைய இந்தியாவின் சோகமான யதார்த்த நிலை . இந்த யதார்த்தத்திலிருந்து நம் கண்களை மூடி கொள்ள இயலாது ” என்று அவர் கூறினார்.
தொடர் கும்பல் வன்முறையில் ஈடுபடும் வலதுசாரிகள் :
2014 ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்தன, மே மாதத்தில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இந்து வலதுசாரி களை மேலும் தைரியப்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாட்டிறைச்சி வைத்திருப்பதாக அல்லது மாடுகளை அறுக்கிறார்கள் என்ற கூறி முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் தீவிர வலதுசாரி கும்பல்களால் தாக்கப்பட்டனர், கொடூர தாக்குதல்களால் கொல்லப்பட்டனர்.
மே மாதத்தில் பாஜக ஆட்சிக்கு திரும்பியதிலிருந்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட காட்டாயப்படுத்தி ஏராளமான முஸ்லிம்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறான பல்வேரு குற்றச்சம்பவங்களில் ஆய்வு செய்ததில் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே முஸ்லிம்கள் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
தொடர் வெறுப்பு குற்ற சம்பவங்கள் :
கடந்த ஜூன் 20 அன்று, கொல்கத்தா நகரில் முகமது ஷாருக் ஹல்தார் என்பவர் மதரஸாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, காவி கொடிகளை ஏந்திய ஒரு கும்பல் ரயிலில் ஏறியது.
ஹல்தார், பாரம்பரிய குர்தா-பைஜாமா மற்றும் தலையில் முஸ்லிம்கள் அணியும் தொப்பி அணிந்திருந்தார், அந்தக் கும்பலை சேர்ந்த ஒருவர் அவரின் தாடியை பிடித்து இழுத்து “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிடச் சொன்னார்.
“உடனே அங்கிருந்த மற்றவர்களும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள், அவர்கள் அனைவரும் நான் அவர்களுடன் கோஷமிட வேண்டும் என்று வற்புறுத்தினாரகள். நான் மறுத்தபோது, அவர்கள் என்னை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்கள்” என்று 20 வயதான ஹல்தார் அல் ஜசீராவிடம் கூறினார்.
“சக பயணிகள் ஒருவர் கூட அவருக்கு உதவ முன்வரவில்லை , கும்பலிலிருந்து தப்பிக்க ரயிலில் இருந்து குதித்தேன் . பிளாட்பாரத்தில் விழுந்ததால் உயிர் பிழைத்தேன். கடவுளுக்கு நன்றி ” என்று அவர் கூறினார்.
ஹல்தார் தனது தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொலிஸ் புகார் அளித்த போதிலும், அவர் மேலும் தாக்குதல்களுக்கு அஞ்சுகிறார், மேலும் அவரது குடும்பத்தினர் அவரை வெளியே செல்வதையே தடுக்கின்றனர்.
“நான் கற்பிப்பதற்காக இனி மதரஸாவுக்குச் செல்வதாக இல்லை . இந்த சம்பவம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, நான் மீண்டும் ரயிலில் கூட பயணிக்க விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்தியாவிற்கு உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய அன்சாரியின் படுகொலை !
ஹல்தார் தாக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் ஜார்கண்டில் உள்ள கர்சவன் மாவட்டத்தில் 24 வயதான தப்ரெஸ் அன்சாரி என்பவரை திருடர் என்று சந்தேகித்து ,மின்சார கம்பத்தில் கட்டப்பட்டு ,காட்டுமிராண்டி கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதனால் அவர் இறந்தே போனார்.
பின்னர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த மொபைல் போன் வீடியோக்களில் , கடுமையாக தாக்கப்பட்டு , இரத்த வெள்ளத்தில் இருக்கும் அன்சாரியை “ஜெய் ஸ்ரீ ராம்” மற்றும் “ஜெய் ஹனுமான்” என்று கோஷமிட நிர்பந்திக்கப்படுவதைக் காட்டியது.
சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் எழுந்த கண்டனங்களையடுத்து ஜூன் 22 அன்று பொலிசார் அன்சாரியை ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்ககப்பட்டது.
“அவர் ஒரு முஸ்லீம் என்பதால் தான் , அவர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார்” என்று அன்சாரியின் மனைவி ஷைஸ்டா என்டிடிவி நெட்வொர்க்கிற்கு தெரிவித்தார்.
இதற்கு பிறகு போராட்டங்கள் நடந்த போதிலும் ,வெறுப்பு கும்பல் தாக்குதல்கள் தொடர் கதையாகவே உள்ளது.
ஜூன் 28 அன்று, உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் தொப்பி அணிந்த ஒரு முஸ்லிம் இளைஞர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷமிட மறுத்ததால், கடுமையாக தாக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் ஒரு முஸ்லீம் மதகுருவின் தொப்பியை கழற்றி எரிந்து ,தாடியை பிடித்து இழுத்து, ஜெய் ஸ்ரீராம் என்று கூற வற்புறுத்தி 12 குண்டர்கள் கடுமையாக தாக்கினர் . இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வெறுப்பு குற்றங்களை கண்காணிக்கும் factchecker.in வலைத்தளத்தின்படி, இந்த ஆண்டு இதுவரை இவ்வாறான 18 சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.
‘ஹெல்ப்லைன் (உதவி எண்) அறிவிப்பு மாநிலத்தின் தோல்வியை தான் காட்டுகிறது’
கடந்த ஆண்டு இந்தியாவின் உச்சநீதிமன்றம் , கும்பல் வன்முறையின் “கொடூரமான செயல்களை” கண்டித்து, கும்பல் கொலைகளைச் தடுக்க ஒரு புதிய சட்டத்தை இயற்றுமாறு அரசாங்கத்திடம் கோரியது. ஆனால் அது குறித்து இதுவரை எந்த ஒரு சட்டமும் இயற்றப்படவில்லை.
புதுடெல்லி நிகழ்ச்சியில் பேசிய இஸ்லாமிய அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்தின் மவ்லானா ஹக்கீமுதீன், இந்து வலதுசாரிகளால் பரப்பப்டும் “ஒரு தேசம், ஒரு கலாச்சாரம்” என்ற சித்தாந்தம் தான் கும்பல் வன்முறை குற்றங்கள் அதிகரிப்பதன் பின்னணியில் உள்ளது என்றார்.
“இந்தியா ஒரு பன்முக கலாச்சார தன்மை கொண்ட நாடு, அவர் அவருடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றி வாழ அனைவருக்கும் சம உரிமை உண்டு.இந்த சம்பவங்கள் நிறுத்தப்படாவிட்டால், அவை மேலும் அராஜகத்திற்கு வழிவகுக்கும். ஆளும் அரசு நினத்தால் இவ்வாறான வெறுப்பு குற்றங்களை முற்றிலும் ஒழிக்க இயலும் ஆனால் அரசு இதெயெல்லாம் கண்டு கொள்வதாக இல்லை .” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஒரு ஹெல்ப்லைன் தொடங்குவது வெறுப்பு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ரீதியான உதவியை வழங்க உதவும் என்று சமூக ஆர்வலர்கள் நம்புகின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கசலா ஜமீல், ஹெல்ப்லைன் ஒரு சிவில் சமூக முன்முயற்சி மட்டுமே என்றும், ” இது ஒரு அரசு எடுக்க வேண்டிய கடும் நடவடிக்கை போல பயனுள்ளதாக இருக்க முடியாது” என்றும் தெரிவித்தார் .
“இந்த ஹெல்ப்லைனை அறிவித்திருப்பதே அரசு தனது குடிமக்களைக் காப்பாற்றுவதில் முற்றிலும் தோல்வியுற்றது என்பதைக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.