டெல்லியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு:
புதுதில்லியில் மிக மோசமான நிலையில் வசித்து வரும் ரோஹிங்கியா அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகஸ்ட் 17 அன்று தெரிவித்தார்.
புதுதில்லியில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகளுக்கான புதிய ஏற்பாடுகளை குறித்து ட்விட்டரில் அமைச்சர் ஹர்தீப் விளக்கினார். “புகலிடம் தேடி வந்தவர்களை, இந்தியா எப்போதும் வரவேற்றுள்ளது” என அவர் கூறியுள்ளார்.
“இந்தியா 1951 ஐ.நா. அகதிகள் மாநாட்டை மதிக்கிறது, பின்பற்றுகிறது. அனைவருக்கும் அவர்களின் இனம், மதம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அடைக்கலம் அளிக்கிறது” என்று ஹர்தீப் கூறினார்.
திடீர் அறிவிப்பு :
பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஏற்கனவே பௌத்த நாடான மியான்மரில் இருந்து முஸ்லிம் சிறுபான்மையினரை திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளது. இந்த நிலையில் இந்த திடீர் முடிவை கண்டு பலரும் ஆச்சிரியத்தில் உள்ளனர்.
கூடாரங்களில் தங்கியுள்ள சுமார் 1,100 ரோஹிங்கியாக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் 24 மணிநேர பாதுகாப்புடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் தீவிபத்துகள்:
தேசிய தலைநகரில் ரோஹிங்கியாக்களை தங்க வைப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் டெல்லி அரசு, டெல்லி காவல்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அடுக்குமாடி குடியிருப்புகள் :
மதன்பூர் காதர் பகுதியில் உள்ள முகாமில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து ரோஹிங்கியாக்கள் இடம்பெயர்ந்த கூடாரங்களுக்கு டெல்லி அரசு மாத வாடகையாக சுமார் ₹ 7 லட்சம் செலுத்தி வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அகதிகள் இப்போது டெல்லியின் பக்கர்வாலா கிராமத்தில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (NDMC) குடியிருப்புகளுக்கு மாற்றப்பட உள்ளனர்.
EWS வகையைச் சேர்ந்த மொத்தம் 250 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அங்கு தற்போது மதன்பூர் காதர் முகாமில் வசிக்கும் 1,100 ரோஹிங்கியாக்களும் தங்கவைக்கப்படுவார்கள்” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் மிக மோசமாக மத மற்றும் இன அடிப்படையில் வன்முறைக்கு ஆட்பட்டவர்கள் மியான்மரை சேர்ந்த ரோஹிங்யா மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திடீர் அறிவிப்பு எதனால் என்று தெரியவில்லை என்றாலும், இந்த அறிவிப்பால் வலது சாரி ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மோடி அரசையும் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
(ஏஜென்சி உள்ளீடுகளுடன்)