வடக்கு கோவா-வில் உள்ள அசாகோ பகுதியில் ‘சில்லி சோல்ஸ் கஃபே அண்ட் பார்” என்ற பெயரில் பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி நடத்தி வரும் பாருக்கு போலி ஆவணங்கள் மூலம் இறந்தவர் பெயரில் உரிமம் வாங்கி நடத்திவருவது குறித்து செய்தி வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஐரிஸ் ரோட்ரிகியூஸ் என்ற வழக்கறிஞர் நேற்று அளித்துள்ள புகாரின் அடிப்படையில், கோவா கலால் ஆணையர் நாராயண் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் ஜூலை 29 ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12500 சதுர அடியில் நவீன வசதிகளுடன் சொகுசாக அமைந்திருக்கும் இந்த உணவகத்துடன் கூடிய பாருக்கான உரிமம் அந்தோனி டகமா என்பவர் பெயரில் உள்ளது.
கோவா மாநில கலால் விதிகளின்படி உணவகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பார் நடத்த அனுமதி வழங்கப்படும்.
சில்லி சோல்ஸ் பாருக்கு 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிநாட்டு மதுபானம் விற்பனைக்கான உரிமமும் இந்தியாவில் தயாரான வெளிநாட்டு மதுபானம் மற்றும் உள்நாட்டு மதுபான வகைகளை விற்பதற்கான மற்றொரு உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உணவகம் வைத்திருப்பவருக்கு மட்டுமே பார் நடத்த உரிமம் வழங்கப்படும் என்ற விதிகளுக்கு புறம்பாக உரிமம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த உரிமம் மும்பையின் விலே பார்லி பகுதியில் வசிக்கும் அந்தோனி டகமா பெயரில் வழங்கப்பட்டுள்ளது. அந்தோனி டகமாவுக்கு 2020 ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆதார் அட்டையை சான்றாக வைத்தே பார் நடத்தும் உரிமத்துக்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
தவிர, பாரின் உரிமையாளரான அந்தோனி டகமா 2021 ம் ஆண்டு மே மாதம் 17 ம் தேதி மரணமடைந்தது மும்பையில் எடுக்கப்பட்ட இறப்பு சான்று மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது 2022 ஜூன் 22 ம் தேதி இந்த பாருக்கான உரிமையை புதுப்பிக்க கோரி கடந்த ஆண்டு இறந்த அந்தோனி டகமா பெயரிலேயே விண்ணப்பித்ததோடு “இன்னும் ஆறு மாதங்களில் இந்த உரிமத்தை பெயர் மாற்றம் செய்துகொள்கிறோம்” என்று உத்தரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆர்டிஐ விண்ணப்பத்தின் மூலம் ஆவணங்களை கையிலெடுத்த வழக்கறிஞர் ரோட்ரிக்ஸ், “ஒன்றிய பாஜக அமைச்சரின் குடும்பத்தினர் கலால் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அசாகோ பஞ்சாயத்துடன் இணைந்து நடத்திய இந்த மெகா மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
யூ-டியூபர் குணால் விஜய்கரின் யூ-டியூப் சேனலில் இந்த சொகுசு பார் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பாஜக ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி “கோவா ஒரு பெரிய சுற்றுலா மையமாக இருந்தபோதிலும், சர்வதேச அளவிலான உயர்தர உணவுகளில் பின்தங்கியிருக்கிறது. கோவாவின் சில்லி சோல்ஸ் உணவுக்கான முக்கிய இடமாக விரைவில் மாறும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.