இந்தியா முழுவதும் தபால் துறை நடத்தும் தபால்காரர், உதவி தபால்காரர், மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் (எம்.டி.எஸ்), மெயில் காவலர் போன்ற தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கடந்த ஆண்டு வரை அந்தந்த மாநில மொழிகளில் நடைபெற்று கொண்டிருந்தன. தென் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த 2016-17 ஆம் ஆண்டில் தபால் துறையின் தேர்வின் போது மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல இந்தி மொழி பேசும் தேர்வெழுதுவோர் தமிழ் தாளில் தமிழ்நாடு வேட்பாளர்களை விட அதிக மதிப்பெண்களைப் பெற்றதால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் தேர்வுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தபால் தேர்வுகள் இரு மொழிகளில் (ஆங்கிலம் மற்றும் ஹிந்தி) மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 1,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளதால் தேர்வெழுதுவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடைசி நிமிட மாற்றத்திற்கான காரணத்தை அஞ்சல் துறை குறிப்பிடவில்லை. பலமுறை முயற்சித்த போதிலும், தபால் அதிகாரிகளை அணுக முடியவில்லை.
இந்த அறிவிப்பிற்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , பாமக தலைவர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.