பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் 17 முதல் 19 வரையில் `தர்ம சன்சத்’ என்ற இந்துமத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசப்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த வாரம் ரூர்கீ என்ற ஊரில் முஸ்லிம்கள் ஊரை விட்டே விரட்டி அடிக்கப்பட்டனர், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. எனினும் இதை குறித்து எந்த ஒரு மீடியாவும் பெரிதாக செய்தி வெளியிடவில்லை.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ‘தரம் சன்சாத்’ இந்துமத நிகழ்ச்சி நிகழ்ச்சியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரகாண்ட் அரசை உச்ச நீதிமன்றம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது.
“நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை ஏதாவது சொல்ல வைக்காதீர்கள். தடுப்பு நடவடிக்கைக்கு வேறு வழிகள் உள்ளன. அதை எப்படி செய்வது என்று உங்களுக்குத் தெரியும்!” என்று உத்தரகாண்ட் மாநிலத்தின் துணை அட்வகேட் ஜெனரல் ஜதீந்தர் குமார் சேதியிடம் நீதிபதி கான்வில்கர் கூறினார்.
‘தரம் சன்சாத்’ கூட்டத்தின் போது நிகழ்த்தப்பட்ட வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி பத்திரிகையாளர் குர்பான் அலி மற்றும் மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிரகாஷ் (பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி) ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், அபய் ஸ்ரீனிவாஸ் ஓகா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.
தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தெஹ்சீன் பூனாவல்லா வழக்கில் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை உத்தரகாண்ட் அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நினைவூட்டிய பெஞ்ச், ‘தரம் சன்சாத்தில்’ வெறுப்புப் பேச்சு சம்பவங்கள் நடந்தால் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தான் பொறுப்பேற்க வேண்டும், அதற்கான விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“இந்த நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அறிவித்த போதிலும், பூனாவாலா தீர்ப்பு மற்றும் ” களநிலவரம் வேறொன்றாகவே உள்ளது. பூனாவாலா தீர்ப்பு மட்டுமின்றி அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டவாறு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை, இந்த நீதிமன்றம் மீண்டும் மீண்டும் அறிவித்த போதிலும், இன்னும் நிலைமை அவ்வாறே தொடர்கிறது.” என நீதிபதி கான்வில்கர் கூறினார்.