கொரோனா காலங்களில் உணவு பெற்று கொள்ள போராடும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தலா இருபது குழந்தைகள் வரை பெற்றிருந்தால் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ரேஷன் திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் பெற்று இருக்க முடியும் என பாஜக வை சேர்ந்த உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தார்.
“ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து கிலோ ரேஷன் வழங்கப்பட்டது. 10 பேர் உள்ள வீட்டில் 50 கிலோ கிடைத்தால், 20 பேருக்கு ஒரு குவிண்டால் (100 கிலோ) கிடைத்தது. ஆனால் சிலர் பொறாமைப்பட்டு இரண்டு பேருக்கு 10 கிலோ, 20 பேருக்கு ஒரு குவிண்டால் கிடைத்தது. ஏன்? என கேட்கின்றனர். முன்னர் நேரம் இருந்த போது, நீங்கள் இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றெடுத்தீர்கள் … ஏன் 20 பேரை பெற்றேடுகவில்லை? ” என பாஜக முதல்வர் கேள்வி எழுப்பினார்.
இந்த சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்தில், ராவத் பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார், இதன் கீழ் அரசாங்கம் ஒரு வீட்டிற்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் மற்றும் ஒரு நபருக்கு ஒரு கிலோ பருப்பு வகைகளை வழங்குகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட முதல்வரான இவர் ராம்நகரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும் “மற்ற நாடுகளை விடவும், COVID-19 நெருக்கடியைக் கையாள்வதில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது. 200 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி உலகை ஆண்ட அமெரிக்கா, தற்போதைய காலங்களில் போராடி வருகிறது ”என்று ராவத் கூறினார்.