யோகா செய்வதும், இந்து மதப் பாடலான காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து உச்சரிப்பதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நோயில் இருந்து குணப்படுத்த உதவுமா என்பதை தீர்மானிக்க அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், (ரிஷிகேஷ்) மருத்துவ பரிசோதனையை நடத்தி வருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இம்மருத்துவ சோதனைக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதி பெற்று இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது.
“மிதமான அறிகுறிகள்” கொண்ட 20 நோயாளிகளை கொண்டு இந்த சோதனை நடத்தப்படும், அவர்கள் இரண்டு சம குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். அவர்களில் ஒருவர் கோவிட் -19 க்கான நிலையான சிகிச்சையைப் பெறுவார், மற்ற நோயாளிகள் – வழக்கமான சிகிச்சையைப் பெறுவதோடு கூடுதலாக – காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும், பிராணயாமா யோகா ஆசனத்தை 14 நாட்களுக்கு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“SARS-CoV2 [கொரோனா வைரஸ்] காரணமாக ஏற்படும் கொரோனா வைரஸ் என்பது மனிதனின் சுவாச கட்டமைப்பை முதன்மையாக குறிவைக்கும் முக்கிய வைரஸ்களில் ஒன்றாகும். காயத்ரி மந்திரம் இந்துக்களின் மிக புனிதமான பிரார்த்தனை. இந்த வைரஸுக்கு இதுவரை எந்த சிகிச்சையும் அல்லது தடுப்பூசியும் இல்லை. மற்ற நோய் சிகிச்சைகளில் பிராணயாமா யோகா மற்றும் காயத்ரி மந்திரம் உச்சரித்தால் ஆகியவை பெரும் பலன் அளித்ததை போல கொரோனா விஷயத்திலும் பலன் அளிக்கும் என நம்புகிறோம் ” என இந்திய மருத்துவ பரிசோதனை பதிவேட்டில் எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.