Corporates

2021 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக செல்வத்தை ஈட்டியுள்ளார் அதானி; அமேசான் ஜெப் பேஸாஸ் , எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி சாதனை!

குஜராத்தை சேர்ந்த அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, கோவிட் -19 தொற்றுநோய் பரவி மக்கள் எல்லாம் முடங்கி போயிருந்த நிலையிலும் புதிய மைல்கல் சாதனையை படைத்துள்ளார், அவர் சமீபத்திய ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலகில் அதிக அளவில் தன் செல்வத்தை பெருக்கியவர் என்ற பெருமையை அடைந்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் அட்டவணை 2021 ஆம் ஆண்டில் இதுவரை அதானி 16.2 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளதாகக் தெரிவித்துள்ளது, அவருடைய மொத்த நிகர மதிப்பு 50 பில்லியன் டாலராக உள்ளது. இதன் மூலம் அதானி, உலகின் 26 வது பணக்காரர் என்று நிலையை அடைந்துள்ளார்.

உலகின் இரண்டு பணக்கார நபர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோரையும் விட இந்த ஆண்டு அதிக செல்வ வளர்ச்சியை அடைந்துள்ளார் அதானி. எலோன் மஸ்க் இதுவரை தனது நிகர மதிப்பில் 10.3 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ள நிலையில், பெசோஸ் 7.59 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார்.

விமான நிலையங்கள், வணிகம் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் அதானி குழுமம் தன் தடத்தை வேகமாக விரிவடைய செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில், அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட், வார்பர்க் பிங்கஸின் ஒரு பிரிவான விண்டி லேக்ஸைட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ .800 கோடி முதலீடு செய்யும் என்று அறிவித்தது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 84.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 10 வது பணக்காரர் ஆவார். 2021 இல் இதுவரை, அவர் 8.05 பில்லியன் டாலர் சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.