Delhi Pogrom Muslims

டில்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்து வரும் வக்கீலின் அலுவலகத்தில் டில்லி போலீசார் மீண்டும் சோதனை..

கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாசிச பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் பலர் உயிர் இழந்தனர், முஸ்லிம்கள் வீடுகள் சூறையாடப்பட்டு, துரத்தி அடிக்கப்பட்டனர். பாதிக்கபட்டவர்கள் மீதே டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் என்று பலரும் எடுத்துக்காட்டி வருகின்றனர். இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட பலருக்கும் மெஹ்மூத் பிராச்சா வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

மெஹ்மூதின் சட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியின் “குற்றச்சாட்டு ஆவணங்கள்” மற்றும் “அவுட் பாக்ஸின் மெட்டாடேட்டா” ஆகியவற்றைத் தேடுவதற்காக உள்ளூர் நீதிமன்றம் அளித்த வாரண்டின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறி டெல்லி காவல்துறை கடந்த ஆண்டு டிசம்பரில் மெஹ்மூத் பிராச்சாவின் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இது கடும் விமர்சனத்திற்கு வித்திட்டது.

இந்நிலையில் மீண்டும் மார்ச் 9 ஆம் தேதி டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் இரண்டாம் முறையாக சோதனை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக மெஹ்மூத் பிராச்சா டெல்லி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த சோதனை “முற்றிலும் சட்டவிரோதமானது, நியாயமற்றது” என்று அவர் கூறியுள்ளார்.

வக்கீல் மெஹ்மூத் பிராச்சாவின் கூற்றுப்படி, அவர் அலுவலகத்தில் இல்லாத நிலையில் இரண்டாவது சோதனை நடத்தப்பட்டுள்ளது. நீதிபதி ஏ.எஸ்.ஜே.தர்மேந்தர் ராணா முன், மெஹ்மூத் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த சமயத்தில், 100 க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

கடந்த 2020 டிசம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அவரது அலுவலகத்தில் சோதனை செய்த போது, டில்லி போலீசார், ஏற்கனவே அனைத்து ஆவணங்களையும் சேகரித்து பென் டிரைவில் பறிமுதல் செய்ததாக வாதிடப்பட்டது. மெஹ்மூதின் கூற்றுப்படி, இந்த முழு சோதனையும் அவர் கையாண்டு வரும் முக்கியமான வழக்குகளின் “முழு தரவையும் சட்டவிரோதமாக திருடும் ஒரே நோக்கத்துடன்” நடத்தப்பட்டது என்கிறார்.