மக்கள் குறைகளை செவிசாய்காத அதிகாரிகளை பொதுமக்கள் “மூங்கில் குச்சிகளைக் கொண்டு அடிக்குமாறு” அறிவுறுத்தி உள்ளார் பாஜக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சனிக்கிழமை பீகார், கோடவந்த்பூரில் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் உரையாற்றியபோது இந்த கருத்தை தெரிவித்தார்.
மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை இலாகாக்களின் அமைச்சரான அவர் பொது மக்களிடமிருந்து அடிக்கடி புகார்கள் வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் புகார்களுக்கு சிறிதும் கவனம் செலுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
“நான் உங்களிடம் சொல்வது என்னவென்றால்.. இதுபோன்ற சிறிய விஷயங்களுக்காக நீங்கள் ஏன் என்னிடம் வருகிறீர்கள். எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், கிராம அலுவலர்கள், டி.எம்., எஸ்.டி.எம்., பி.டி.ஓக்கள் … இவர்கள் அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய நிலையில் உள்ளவர்கள். அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால், இரு கைகளாலும் மூங்கில் குச்சியை எடுத்து அவர்களின் தலை நொறுங்கும் விதத்தில் அடியுங்கள்”என்றார் பாஜக அமைச்சர் கிரிராஜ்.
இதுவும் வேலைக்கு ஆக வில்லை என்றால் பிறகு என்னிடம் வாருங்கள், நான் செய்யவேண்டியதை செய்கிறேன் என கூறினார் அமைச்சர்.
இது குறித்து கருத்து தெரிவித்த (பெயர் குறிப்பிட விரும்பாத) பாஜக தலைவர் ஒருவர், அமைச்சர் கிரிராஜ் அவர்களின் இப்பேச்சை நேரடி பொருளில் விளங்கி கொள்ளக்கூடாது, அடையாளப்பூர்வமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
சட்டம் என்று ஒன்று இருக்கையில் மத்திய அமைச்சர் ஒருவரே வன்முறையை தூண்டும் விதத்தில் பேசலாமா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் கிரிராஜ் இவ்வாறு பேசுவதை சகித்து கொள்ள முடியாத அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இது குறித்து அதிருப்தி தெரிவித்தார் எனினும், பாஜக உடன் கூட்டணியில் உள்ளதால் பல் பிடுங்க பட்ட பாம்பாக உள்ளார் என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.