BJP Karnataka

கர்நாடகா: பாஜக வின் 6 அமைச்சர்கள் தங்களின் நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு..

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணுடன் பாலியல் உறவு வைத்து கொண்ட குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது, 6 கேபினட் அமைச்சர்கள் தங்கள் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எந்த ஒரு செய்தியையும் ஊடகங்கள் ஒளிபரப்பவோ, அச்சிடவோ கூடாது என கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

இந்த அமைச்சர்கள் சார்பாக சில தனிநபர்களால் தடை உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மீடியாகளில் செய்தி வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என அமைச்சர்கள் கூறியுள்ளது பெரும் ஆச்சிர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், சிவராம் ஹெப்பர், பி.சி. பாட்டீல், எச்.டி சோமாஷேகர், கே சுதாகர், நாராயண் கவுடா மற்றும் பைரதி பசவராஜ் ஆகிய ஆறு பாஜக கேபினட் அமைச்சர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நகர சிவில் நீதிமன்றத்தின் இணையதளத்தில் ஒரு காரண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 2019 ல் ஜூலை மாதம் இந்த ஆறு அமைச்சர்களும் காங்கிரஸ் மற்றும் ஜே.டி.எஸ்ஸில் இருந்து பாஜகவுக்கு கட்சி தாவியவர்கள், இது கர்நாடகாவில் முந்தைய கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 2019 டிசம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று பின்னர் அமைச்சரவை அமைச்சர்களாக மாற்றப்பட்டனர்.

ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னாள் பாஜக அமைச்சர் ஜர்கிஹோலி மீது ஒரு சமூக ஆர்வலர் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.