பாலன் முதலானோர் கைது ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக விடப்படும் எச்சரிக்கை என்று தோழர் மார்க்ஸ் அந்தோணிசாமி கருத்து தெரிவித்துள்ளார். கீழே அவரது கட்டுரை வழங்கப்படுகிறது.
“பா.ஜ.கவைத் தோற்கடிப்போம்” – எனும் முழக்கத்தை எடுத்த அடுத்த சில நாட்கள் முதல் கொடும் UAPA சட்டத்தின் கீழ் தோழர்கள் கைது செய்யப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த ஆபத்தான ஜனநாயக விரோதப் போக்கிற்கு உரிய எதிர்ப்பைக் காட்டவில்லை. நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. பட்ஜெட் நிதிநிலை அறிக்கை முதலானவற்றிலும் கூட உறுதியான எதிர்ப்புகள், ஆழமான விவாதங்கள் ஏதும் இல்லை.
பெருந் தொற்றைக் காரணம்காட்டி நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது. விவாதங்களுக்கு வாய்ப்பில்லாமல் செய்யப்படுகின்றன. ஆனால் இன்னொருபக்கம் கார்பொரேட்கள் பெரும் பயன்களை அடைகின்றனர். திருப்பி இயக்க முடியாத அளவிற்கு ஜனநாயக நிறுவனங்கள், கல்விக் கொள்கை முதலான அரசின் அடிப்படை அணுகல்முறைகள் ஆகியன திரும்பி இயக்க இயலாத அளவிற்கு வேகமாக மாற்றப்படுகின்றன.
அரசியல்சட்ட அடிப்படைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள உச்சநீதிமன்றம் அரசின் கைப்பாவையாக ஆக்கப்பட்டுவிட்டது. அரசியல் சட்ட அவையில் டாக்டர் அம்பேத்கர், நமது அரசியல் சட்ட்த்தின் உயிர்நாடியாக உள்ளது 32 வது சட்டப்பிரிவு என்றார். அந்தச் சட்டப்பிரிவு இன்று அப்படியே சட்டத்தில் இருந்தபோதும் செயல்பாட்டில் இல்லை. Habeas Corpus உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்குக் கிடையாது என்பது இன்று மறைமுகமாக குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுவிட்டது. பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ள வரவர ராவ். கோவிட் 19 தாக்குதல், சுய நினைவு இல்லாத நிலை. பெயில் கேட்கும்போது அரசுத்தரப்பு மறுக்கிறது. வீட்டுக்குக் கொண்டு சென்றுதான் என்ன செய்யப் போகிறீர்கள்.? மருத்துவமனையில்தானே வைக்கப் போகிறீர்கள்? நாங்களே மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம்.
வேண்டுமானால் எப்போதாவது ஸூம் நுட்பம் மூலம் பார்த்துக் கொல்ளலாம் எனத் திமிருடன் பதில் சொன்னதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்? – எனத் திமிராகப் பதில் வருகிறது அரசு வழக்குரைஞரிடம் இருந்து. நான் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு இளம் கல்லூரி ஆசிரியனாகப் பணியாற்றிய காலத்தில்தான் இங்கு நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்ட்து. அப்போது 5 நீதிபதிகள் அமர்ந்திருந்த அந்த அரசியல்சட்ட அமர்வில் அப்போதைய இந்திய அர்சின் தலைமை வழக்குரைஞர் நிரேன் டே எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டால் மக்களுக்குத் தம் உயிரை வைத்துக்கொள்ளும் உரிமை கூடக் கிடையாது எனக் கரகரத்த குரலில் சொல்லியது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.
இன்றும் இதுதானே நிலை? இன்று ஹேபியாஸ் கார்பஸ் முதலான அடிப்படை உரிமைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகினால், அதற்குரிய அவசரத்துடன் விசாரித்து நீதி அளிக்கப்படுவதில்லை. உச்சநீதிமன்றத்துக்குச் சென்றால் கீழ்நீதிமன்றங்களி அணுகுமாறு அறிவுரைக்கப்படுகிறது.
இன்று அதிவேகமாகச் சட்டங்கள் மாற்றப்படுகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் முதலியன நீர்க்கச் செய்யப்பட்டுவிட்டன. நேரு காலத்திய திட்டமிட்ட பொருளாதாரம் – Planning Commission முதலியன அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. அயலுறவுக் கொள்கைகள் மிகப் பெரிய அளவில் திருப்பி இயக்க இயலாத அளவிற்கு மாற்றப்பட்டுவிட்டன. பௌத்தக் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அயலுறவுக் கொள்கையான பஞ்ச சீலம் எனும் கருத்தாக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
உயர்கல்வி இன்று பல்வேறுவகைகளில் தரம்பிரிக்கப்பட்டுவிட்டன. குறைந்தபட்சமாக மூன்று தரங்களில், உயர் கல்விக்கூடங்கள் பிரிக்கப்படுகின்றன. மாணவர்கள் இரு தரங்களில் 10 ஆம் வகுப்பில் பிரிக்கப்பட்டு அதில் ஒருசாரர் வெறும் தொழிற்கல்வி நோக்கித் தள்ளப்படுகின்றனர். பெரும் ஆர்பாட்டங்களுடன் இங்கெ கொண்டுவரப்பட்டுள்ள இவர்களின் புதிய கல்விக் கொள்கையில் ’இட ஒதுக்கீடு’ பற்றிப் பேச்சே இல்லை.
இன்று IPC, CrPC முதலியன பெரிய அளவில் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. அதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு படு வேகமாக வேலை நடக்கிறது. ஐயத்திற்கு இடமின்றி குற்றம் நிறுவப்படும்வரை, குற்றம் சுமத்தப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்பட வேண்டும், விசாரணையின்போது தன்னைக் குற்ற நடவடிக்கையில் சிக்க வைக்கும் தந்திரமான கேள்விகளுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர் பதிலளிக்காமல் மௌனம் காக்கலாம் எனும் கருத்தாக்கம் – மாலிமத் கமிட்டி – அறிக்கையின் அடிப்படையில் நீக்கப்படுகிறது. குற்றத்தைச் சுமத்துவது மட்டுமே ப்ராசிகியூஷனின் பணி. குற்றத்தை நிரூபிக்க வேண்டிய பணி அதற்கு இல்லை. தான் குற்றமற்றவன் என நிறுவும் பணி குற்றம் சுமத்தப்பட்டவருடையது என்பதே இன்று புதிய அணுகல்முறையாகிவிட்ட்து.
இஸ்ரேல் பாணியில் குடியுரிமைச் சட்டம் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏற்கனவே அசாமில் நடைமுறை தொடங்கிவிட்டது. இதற்கு எதிராக, மிகவும் அமைதியான முறையில் டெல்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்ட்த்தில் பங்குபெற்றவர்களில் நூற்றுக் கண்க்கானோர் இன்று சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவிட் 19 தாக்குதலை ஒட்டி யாரும் கேட்டுக்கொள்ளும் முன்பாகவே ஷாஹின்பாத் அமர்வை முஸ்லிம் பெண்கள் முடிவுக்குக் கொண்டுவந்திருந்தும் இன்று மிகப் பெரிய அளவில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம்கள் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் அமைதி வழியில் போராட்டத்தை நட்த்தினர். போராட்டம் முடிந்தபின் முஸ்லிம்கள் மீது சங்கப் பரிவாரிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதலில் இன்று சுமார் 40 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான கைது நடவடிக்கையின்போது “இந்துக்களின் மனம் கோணாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என மோடி அரசின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சுற்ற்றிக்கை அனுப்பியதைக் கண்டோம். ஹிட்லர், முசோலினி ஆட்சிகள் தவிர வேறெங்கேனும், வேறெபோதேனும் இப்படியெல்லாம் நடந்ததுண்டா?
அறிவுஜீவிகள் இன்று பொய்வழக்குகளில் கைது செய்யப்பட்டு கொடும் UAPA முதலான சட்டங்களில் போடப்பட்டுள்ள வழக்குகளில் இன்று சுமார் இரண்டாண்டு காலமாகச் சிறையில். ஆனந்த் டெல்டும்டே பீமா கொரேகான் போராட்டத்தை விமர்சித்தவர். அதைக் கொண்டாடுவது பெருமைக்குறிய ஒன்றல்ல என்றார். பிரிட்டிஷ் படையில் தலித்கள் இருந்து போரிட்டது ஏதோ பார்ப்பன பேஷ்வா ஆட்சியை ஒழிப்பதற்காகவெல்லாம் அல்ல. அன்று தலித்கள் பேஷ்வாவின் படைகளிலும் இருந்தனர். அதை ஒரு தொழிலாகவே மேற்கொண்டனர் என்றெல்லாம் தான் சொன்னதைப் பின் அவர் விளக்கியும்கூட அதை எல்லாம கண்டுகொள்ளாமல் அவர் இன்று சிறையில்.
அவர்கள் நமக்கு இன்று சொல்ல விரும்புவது ஒன்றுதான். எங்கள் ஆளுகையை விமர்சிக்கும் யாரையும் அனுமதிக்க முடியாது. விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஓரங்கம் எனும் சொல்லும் கதையை எல்லாம் நாங்கள் இனி கேட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. என்கிற செய்தியை இந்திய மக்கள்முன் வைப்பதற்காகத்தான் இன்று சுமர் 18 பேர்கள் இரண்டாண்டுகளாகச் சிறையில் அடை பட்டுள்ளனர்.
தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்பது மட்டுமல்ல. யாருக்குப் போடக் கூடாது எனச் சொல்வதும் ஜனநாயக உரிமை எனச் சொல்லும் கதை எல்லாம் இனி இங்கு சாத்தியமில்லை என இதே முறையில் சொல்வதுதான் இன்று பாலன், சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ் முதலானோரின் கைதுகள். பாலன் முதலானோர் முன்னின்று நடத்திய இட்துசாரி அமைப்புகளின் கூட்டத்தில் பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது எனத் தீர்மானம் இயற்றிய ஒரே காரணம்தான் இன்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது,ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள யாரும் இதை ஏற்க இயலாது.