புது டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் தொடக்கக் கல்விக்கு முந்தைய (Pre-Primary) நிலையிலேயே முஸ்லிம் குழந்தைகள் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுவதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
டில்லி பல்கலைக் கழக சமூகப்பணித் துறையின் ஆராய்ச்சி வல்லுநரான ஜன்னத் ஃபாத்திமா ஃபரூக்கி மற்றும் குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் ஆலோசகரான சுகன்யா சென் ஆகியோர் இணைந்து டிசம்பர்-2020ல் சமர்பித்த “இந்தியாவில் தொடக்க நிலை கல்வியில் ஓரங்கட்டப்படும் முஸ்லிம் குழந்தைகள்: டில்லி தனியார் பள்ளிகளில் நர்சரி சேர்க்கை பற்றிய அலசல்” என்ற ஆய்வறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“டில்லியிலுள்ள அரசு உதவி பெறாத தனியார் நர்சரி பள்ளிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பித்த முஸ்லிம் குழந்தைகளில் 94% பேர் நிராகரிக்கப்பட்டு வெறும் சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே சேர்க்கை அனுமதிக்கப்படுள்ளது.
அதிலும் சில பள்ளிகள் ஒரு முஸ்லிம் குழந்தையைக் கூட சேர்த்துக் கொள்ளவில்லை.
பெரும்பாலான முஸ்லிம்கள் சேரி, குடிசைவாசிகளாக இருப்பது, முஸ்லிம் பெற்றோர்கள் ஏதாவது ஒரு தனியார் பள்ளியில் பணி புரியும் அளவு கல்வித்தகுதி இல்லாமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாகவும் முஸ்லிம் குழந்தைகளின் கல்வி உரிமை பறிக்கப்படுவதாக குறிப்பிடுகிறது அவ்வறிக்கை.
மேலும், வறுமை, ஆண் குழந்தைக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்படுதல், இருபாலர் கல்வியை தவிர்த்தல், மதரஸாவில் கற்பிக்கப்படும் மார்க்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தல் ஆகியவற்றின் காரணமாக முஸ்லிம் பெண் குழந்தை கல்வியானது இன்னும் அதள பாதாளத்தில் உள்ளது.
“எஸ்சி / எஸ்டி பிரிவினரை விட கல்வியறிவு விகிததத்தில் முஸ்லிம்ள் மிகவும் பின்தங்கி உள்ளனர் ” என்று கண்டறியப்பட்டுள்ளது.
2009ல் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட “குழந்தைகளுக்கான இலவச, கட்டாய கல்வி உரிமைக்கான சட்டத்தின்” பயனாக தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்காக ஒதுக்கப்படும் 25% இடங்களில் சில சமூகபொருளாதார நிலையில் மிக, மிகப் பின்தங்கியுள்ள முஸ்லிம் குழந்தைகளுக்கும் கிடைப்பதால்தான் இந்த குறைந்த பட்ச சேர்க்கை கூட சாத்தியமாகி உள்ளது.
இது போன்ற ஏற்றத்தாழ்வுகளைக் கவனத்தில் கொண்டு நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) சமூகத்தில் மேலும் சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்பதையும் இது தெளிவுபடுத்துகிறது.