பெங்களூரைச் சேர்ந்த 21 வயது மாணவி திஷா ரவி பெங்களூரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சூழலியல் செயல்பாட்டாளரான கிரேட்டா துன்பர்க் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு பிரச்சார ஆவணத்தினை பிப்ரவரி 4-ம் தேதி ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
அந்த ஆவணத்தினை தயாரித்ததில் திஷா ரவி-க்கு பங்கு இருப்பதாக குறிப்பிட்டு அவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
சுவீடனில் திஷா:
2018-ம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியான கிரேட்டா துன்பர்க், பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பதற்காக அனைத்து நாடுகளுக்கும் கோரிக்கை வைத்து சுவீடன் பாராளுமன்றத்தின் முன்பு தனது போராட்டத்தைத் துவங்கினார்.
“Fridays For Future” என்று போரட்டத்திற்கு பெயரிடப்பட்டது. பருவநிலை மாற்றத்தினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசியல் தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து, வெள்ளிக்கிழமை தோறும் பள்ளியை தவிர்த்துவிட்டு போராட்டம் நடத்தும் இயக்கமாக அது உருப்பெற்றது. உலகெங்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கிரேட்டா துன்பர்க்கின் போராட்டம் வரவேற்பினைப் பெற்றது.
அமைப்பு துவக்கம்:
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியான திஷா ரவி கிரேட்டா துன்பர்க்கின் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு “Fridays For Future India” எனும் அமைப்பினைத் துவங்கினார். வெள்ளிக்கிழமை தோறும் பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்த வலியுறுத்தி பெங்களூர் மாநகரத்தின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்களையும் நடத்தத் தொடங்கினார் திஷா ரவி.
ஊடகங்களில் திஷா:
கடந்த செப்டம்பர் மாதம் ’தி கார்டியன்’ ஊடகமானது இளம் சூழலியல் செயல்பாட்டாளர்களைப் பற்றி எழுதிய போது திஷா ரவி பெங்களூரில் பருவநிலை மாற்றம் குறித்து ஒருங்கிணைத்த போராட்டத்தினைக் குறிப்பிட்டு எழுதியிருந்தது.
அதில் பேட்டியளித்திருந்த திஷா ரவி,பருவநிலை மாற்றத்தின் காரணமாக பெங்களூர் சந்தித்து வரும் அதீத மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் குறித்தும் அவர் ஊடகங்களில் பேசியிருந்தார்.
தற்போது விவசாயிகள் போராட்டம் குறித்து கிரேட்டா துன்பர்க் பகிர்ந்த ஆவணத்தின் உருவாக்கத்தில் திஷா ரவியும் பங்கெடுத்திருப்பதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டி அவரை கைது செய்துள்ளது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து புரிந்து கொள்வதற்கும், எப்படி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது என்பதையும் விளக்குவதாக அந்த ஆவணம் குறிப்பிட்டுள்ளது. விவசாயிகளுக்கு இணையத்தின் வழியாக எப்படியெல்லாம் ஆதரவளிக்கலாம் என்பதையும் அந்த ஆவணம் தெரிவிக்கிறது.
கைது செய்த மோடி அரசு:
ஆனால் இந்தியாவிற்கு எதிராக சதி நடப்பதற்கான ஆதாரமாக இந்த ஆவணம் அமைந்துள்ளதாக பாஜகவைச் சேர்ந்தவர்களும், அமைச்சர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள். ராஜதுரோகம், சமூகத்தில் வெறுப்பினை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிந்து திஷா ரவியை கைது செய்துள்ளனர்.
திஷாவின் பெற்றோர் மோடி ஆதரவாளர்களாக அறியபடுபவர்கள். எனினும் கூட வலதுசாரிகள் திஷாவை கிறிஸ்தவர் என்றும், திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பிணி ஆகிவிட்டார் என பல்வேறு பொய்களை கட்டவிழ்த்து வருகின்றனர். எனினும் இது பொய்யான தகவல் என திஷாவின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். திஷா லிங்காயத் எனும் இந்து மத பிரிவை சேர்ந்தவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி: சிவா