டெல்லி AIIMS மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஜாஹித் என்ற மருத்துவர் ஒரு கொரோனா நோயாளியைக் காக்கும் போராட்டத்தில் தனது அசாதாரணமான தீரத்தையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கொரோனா நோயாளியை தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு மாற்றி அனுமதிக்குமாறு அவருக்கு அழைப்பு வந்தபோது அவரால் நோன்பைத் திறக்க கூட நேரம் ஒதுக்கமுடியவில்லை. அந்நோயாளிக்கு ஏற்கனவே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மருத்துவர் ஜாஹித் அந்நோயாளியைக் காண ஆம்புலன்ஸிற்குச் சென்ற போது தற்செயலாக அந்நோயாளிக்கு சொருகப்பட்டிருந்த செயற்கைச் சுவாசக் குழல் வெளியில் வந்து அவர் மூச்சுத்திணறிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
நோயாளியின் உயிரைக் காக்க வேண்டுமெனில் உடனடியாக செயற்கை சுவாசக்குழல் சரியாக பொருத்தப்பட வேண்டும். சற்றும் தாமதிக்காத மருத்துவர் ஜாஹித் தான் அணிந்திருந்த PPE எனப்படும் பாதுகாப்பு முழுக்கவசம் அந்த மூச்சுக்குழலை சரியாகப் பொருத்த பார்வையை மறைத்து தடங்கல் செய்ததால் சட்டென பாதுகாப்புக் கண்ணாடியை கழட்டிவிட்டு சரியாக குழலைப் பொருத்தினார்.
இதன் காரணமாக அந்நோயாளியிடமிருந்து தனக்கு தீவிரமான கொரோனா தாக்குதல் ஏற்படலாம் என்ற போதிலும் அவர் தனது கடமையை சரிவர நிறைவேற்றத் தயங்கவில்லை.
தன் கண்முன் மரணத்தை நெருங்கிய ஒரு உயிரைக் காப்பாற்ற மருத்துவர் ஜாஹித் தன்னை ஒரு பெரும் அபாயத்திற்குட்படுத்திக் கொள்ள தயங்காமல் தன் கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளார் என்றே கூற வேண்டும்.
இதன் மூலம் மருத்துவர் ஜாஹித் தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என அதை ஒரு பொருட்டாக கொள்ளாமல் செயல்பட்டுள்ளார்.
தற்போது மருத்துவர் ஜாஹித் (quarantine) தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இறைவன் பாதுகாக்க அனைவரும் பிரார்த்திப்போமாக என மருத்துவர் ஹர்ஜித் சிங் பட்டி (முன்னாள் தலைவர், ஆர்.டி.ஏ,எய்ம்ஸ், தில்லி.) தெரிவித்துள்ளார்.