மஹாராஷ்ட்ரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் சமீபத்தில் கலவரக்கும்பலால் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பா.ஜ.க மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்களால் கடுமையாக கண்டித்து கூப்பாடு போடப்பட்டது.
கொல்லப்பட்ட மூவரில் இருவர் வாரணாசியில் உள்ள ஒரு அகாராவைச் சேர்ந்த சாதுக்கள் என்பதை மையமாக வைத்து பா.ஜ.க மற்றும் சில தொலைக்காட்சி தொகுப்பாளர்களான வலதுசாரி மதவெறியர்கள் இந்த கொலைக்கு மதசாயம் பூசி மதகுரோதத்தை வளர்க்க முயற்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் அத்தனை பேரும் சங்பரிவாரால் இந்து என கூறப்படும் பழங்குடி சமூகத்தினர்தான்; ஒருவர் கூட முஸ்லிமோ, கிறிஸ்தவரோ கிடையாது.
2018 ஜூலையில் இதே மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் துலே என்ற இடத்தில் கோசாவி பழங்குடியினர் சம்பந்தப்பட்ட இதே போன்ற ஒரு கும்பல் கொலை நடந்தது. ஆனால் அப்போது மஹாராஷ்ட்ராவில் பா.ஜ.க ஆண்டு கொண்டு இருந்ததால் இந்த இந்துத்துவ வெறியர்கள் அப்போது அதை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டனர். இப்போது சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடப்பதால் தற்போதைய சம்பவத்தை அரசியலாக்குவதுடன், மதச்சாயமும் பூசுகின்றனர்.
2018 ஜூலையில் இந்துத்துவ கலவரக் கும்பலால் கொலைவெறித் தாக்குதலுக்குள்ளான சுவாமி அக்னிவேஷ் அவர்கள் தற்போதைய பல்கர் சம்பவத்தைக் கண்டித்து இருப்பதோடு, தன்னை தாக்கியவர்களையும், அஹ்லாக், பெஹ்லுக்கான், ஜுனைத் போன்ற அப்பாவி முஸ்லிம்களை அநியாயமாகக் கொலை செய்த இந்துத்துவ வெறியர்களையும் தண்டிக்காத இன்றைய ஆட்சி நிர்வாகத்தையும் கண்டித்துள்ளார்.
2018ல் ஜார்கண்ட் மாநிலம் பகுர் என்ற இடத்தில் பா.ஜ.க – ஆர்எஸ்எஸ் குண்டர்களால் சுவாமி அக்னிவேஷ் தாக்கப்பட்டதில் அவர் கடுமையாகக் காயமுற்றார். ஆனாலும், அன்றைய ஜார்கண்ட் பா.ஜ.க அரசு பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்ததோடு, வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டது.
அதற்கு அடுத்த மாதம் -ஆகஸ்டு 2018 ல் டில்லியில் பா.ஜ.க தலைமையகம் அருகிலேயே பா.ஜ.க குண்டர்களால் சுவாமி அக்னிவேஷ் மீண்டும் கொலைவெறியோடு தாக்கப்பட்டார். இவ்விரு தாக்குதல் வழக்குகளையும் ஒன்றிணைத்து சி.பி.ஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் 2018ல் உச்சநீதிமன்றத்திற்கு சுவாமி அக்னிவேஷ் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான பாப்டே தலைமையில் அப்போது அமைக்கப்பட்ட பெஞ்ச் இவ்விஷயத்தில் தலையிட மறுத்துவிட்டது.
தன் மீது ஆர்எஸ்எஸ்-பாஜக குண்டர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் காரணமாக கல்லீரல் பாதிப்பு உட்பட பல தீவிர பாதிப்புகளை தான் அனுபவிப்பதாக சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார். பல்கரில் சாதுக்கள் கொல்லப்பட்ட சம்பவம் கண்டிகக்கத்தக்கது. அதேசமயம் இக்கொலையில் சம்பந்தமே இல்லாத முஸ்லிம்களையும், கிறிஸ்தவ மிஷினரிகளையும் தொடர்புபடுத்த இந்துத்துவக் கும்பல்கள் முனைவதும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் தாக்கப்பட்டதை அப்போது விவரித்த ரிபப்ளிக் டிவியின் இந்துத்துவ பாசிச சிந்தனை கொண்டவராக விமர்சிக்கப்படும் அர்னாப் கோஸ்வாமி தன்னை மாவோயிஸ்ட் அனுதாபி என வீண்பழி சுமத்தியதையும், தன்னைத் தாக்கிய இந்துத்துவ வெறியர்களைக் காப்பாற்றும் விதமாக அவர்கள் ஏதோ அடையாளம் தெரியாத விளிம்புநிலை நபர்கள் போல திசைதிருப்பியதையும், தான் கிறிஸ்தவ மிஷினரிகளோடு தொடர்பில் இருப்பதாகக் கருதியே அவர்கள் என்னைத் தாக்கியதாக சித்தரித்ததையும் சுவாமி அக்னிவேஷ் நினைவுகூர்ந்துள்ளார்.
அதே விஷமத்தோடு இப்போது அந்த ஊடக இந்துத்துவ வெறியன் அர்னாப் கோஸ்வாமி, “பல்கர் கொலைகாரர்கள் காங்கிரஸ் தலைமையின் கட்டளைப்படியே சாதுக்களைக் கொன்றதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா அம்மையார் இந்தக் கொலை குறித்து மனம் மகிழ்ந்திருப்பார்”, எனவும் விஷத்தைக் கக்கியுள்ளான்.
ஆக்கம்: அபுதாஹீர்