டெல்லி: பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக ஏப்ரல் 19 அன்று 22 வயது ஜாவித் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பிரிஜ்புரியில் உள்ள ஒரு மசூதிக்குள் இருக்கும் போது தான் தாக்கப்பட்டதாக அவர் போலீசில் புகார் அளித்ததாகவும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் சாக்கில் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் முஸ்தபாபாத்தில் வசிக்கும் ஜாவித், தயல்பூர் காவல் நிலையத்தில் கைது செய்து வைக்கப்பட்டுள்ளதாக அவரது தந்தை ஷோகீன் அகமது (45) தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலுக்குள் புகுந்து தாக்குதல்:
ஜாவித் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி பிரிஜ்புரியில் உள்ள உறவினர் ஒருவரிடம் பணம் வாங்க சென்றார். அங்கிருந்து ஃபாரூக்கியா மஸ்ஜிதுக்கு சென்று தொழுதார்.
“அவர்கள் தொழுது செய்துகொண்டிருந்தபோது, போலீஸ் சீருடையில் இருந்த சிலர் ஹெல்மெட் மற்றும் முகத்தை மறைக்கும் விதத்தில் கைக்குட்டையால் மறைத்து கொண்டு மசூதிக்குள் இருந்த அனைவரையும் குச்சிகளால் தாக்க ஆரம்பித்தனர். இந்த தாக்குதலில் ஜாவித்தின் தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் உண்மையான போலீஸ்காரர்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது, ”என்று பால் வியாபாரத்தை நடத்தி வரும் ஷோகீன் தெரிவித்தார்.
தலையில் 10 தையல்கள் போடப்பட்ட ஜாவித்:
காயமடைந்த நிலையில் ஜாவித் வீட்டிற்கு வந்தபோது, அவர் அல் ஹிந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஜாவித் தலையில் 10 தையல்கள் போடப்பட்ட பிறகு வீட்டிற்கு அனுப்பப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கும் பகுதியில், களத்தில் இருந்த வழக்கறிஞர்களின் ஆலோசனையின் பேரில், அவரது மருத்துவ-சட்ட சான்றிதழ் (எம்.எல்.சி) மார்ச் 5 அன்று குரு தேக் பகதூர் மருத்துவமனையில் இருந்து தயாரிக்கப்பட்டது.
ஜாவித் வீட்டிற்கு சென்ற போலீசார்:
இந்த வழக்கில் ஒரு மாதம் முழுவதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆனால் சுமார் 20 நாட்களுக்கு முன்பு, காவல்துறை அதிகாரிகள் எங்களை அணுகினர், அவர்கள் முதலில் எம்.எல்.சி பற்றி கேட்டார்கள், பின்னர் ஜாவித் எவ்வாறு காயமடைந்தார் என்பது பற்றி கேட்டார்கள் என ஜாவிதின் குடும்பத்தார் கூறினர்.
“ஜாவித் முழு சம்பவத்தையும் விவரித்தார். சட்ட நடவடிக்கை வேண்டுமா என்று அவர்கள் கேட்டார்கள், நாங்கள் ஆம் என்று சொன்னோம். நாங்கள் வழக்கு தொடர்வதை அவர்கள் தடுக்க முயன்றனர், ஆனால் நாங்கள் அதில் உறுதியாக இருந்தோம். பிறகு எங்களிடமிருந்து எழுத்துப்பூர்வமாக தகவல்களை பெற்று கொண்டு திரும்பினர்”என்று ஷோகீன் கூறுகிறார்.
அலைக்கழிக்கப்பட்ட ஜாவிதின் குடும்பம்:
அதன் பிறகு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி காவல் நிலையத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. காவல் நிலையம் வந்து உங்களை யார் தாக்கினார்கள் என்பது எங்களுக்கு கூறுங்கள் என அவர்கள் கூறினர். நாங்கள் காவல் நிலையத்திற்கு சென்றோம். பிறகு ஜாவித் என்ன தொழில் செய்கிறார் என கேட்க நாங்கள் அவர் படிக்கிறார் என கூறினோம். ஜாவிதின் கல்வி சான்றிதழ்களை கேட்டனர், அதை கொண்டு சென்றோம்.
அதை பார்த்துவிட்டு எங்களை திரும்பிச் செல்லுமாறு கூறினார் அதற்கு பிறகு மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியிடம் அனுப்பப்பட் டோம். அவர் ஜாவிதிடம் மீண்டும் பல கேள்விகளை கேட்டார். நடந்தவற்றை விவரிக்க சொன்னார். ஜாவித் நடந்த அனைத்தையும் கூறினார். அதன் பிறகு ஜாவித் யாரிடம் சென்று பணத்தை பெற்று வந்தாரோ, அவருக்கு போலீசார் தொலைபேசியில் அழைத்தனர்.
எங்கள் உறவினரான அவர் பயந்தவராக இருந்தார். கேட்கப்படும் கேள்விகளுக்கு பயந்த நிலையில் பதிலளித்தார். அதன்பிறகு ஜாவித் கைது செய்யப்பட்டார். ஒரு நாளும் மண்டோலி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் என்கிறார் ஜாவிதின் தந்தை.
டெல்லி போலீசாரின் கடமை உணர்ச்சி:
“காயமடைந்தவர்கள் கலகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது” என்றும் எம்.எல்.சி.க்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகவும், காயமடைந்தவர்களுடன் இது குறித்து விசாரித்து வருவதாகவும் கலவர வழக்குகளை விசாரிக்கும் பிரிவில் உள்ள போலீஸ் வட்டாரங்கள் தி இந்துவிடம் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் குற்றச்சாட்டு:
கலவரம், பொருட்களை சூறையாடல், மற்றும் திருட்டு குற்றச்சாட்டில் அவர் ‘பெயரிடப்படாத’ எஃப்.ஐ.ஆரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜாவித்தின் வழக்கறிஞர் தீக்ஷா திவேதி கூறினார்.“இது ஒரு தன்னிச்சையான கைது நடவடிக்கை” என்றும் “குற்றச்சாட்டுகள் குறித்து குடும்பத்திற்கு அறிவிக்கப்படவில்லை. இடைக்கால ஜாமீனுக்கான மனுவை நாங்கள் தாக்கல் செய்வோம் ” என்றும் தீக்ஷா கூறினார்.