குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை எதிர்த்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் போராடியதற்காக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை தற்போது டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ், மகேஷ் பட், ரத்னா பதக் ஷா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட திரைப்பட பிரமுகர்கள் ஞாயிற்றுக்கிழமை கூட்டறிக்கை ஒன்றை கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை ஒருங்கிணைத்ததாகக் கூறி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களான மீரன் ஹைதர் மற்றும் சஃபூரா சர்கர் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 23 முதல் 26 வரை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கும் அதை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன, இதில் 53 பேர் கொல்லப்பட்டனர் , நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என ஊடகங்களில் செய்தி வெளியானது நினைவில் உள்ளதா?.
1984 ஆம் ஆண்டு சீக்கிய எதிர்ப்பு கலவரத்திற்குப் பின்னர் டெல்லி கண்ட மிக மோசமான வன்முறை அது, இல்லை இனப்படுகொலை அது. டெல்லி காவல்துறையினரும் பாசிச பயங்கரவாதிகளுடன் இணைந்து கொண்டு அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் கடைகள் , பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை போன்ற பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
கூட்டறிக்கை:
“நாவல் கொரோனா வைரஸ் பரவி வருவது மற்றும் கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுனின் விளைவாக நாடு இப்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது” என்று கையொப்பமிட்டவர்கள் தெரிவித்தனர். “கொடிய வைரஸின் சங்கிலியை உடைப்பதற்காக நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும் பாதுகாப்பாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுளோம்.
இத்தகைய மோசமான சூழ்நிலைக்கு மத்தியில், ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் இரண்டு மாணவர்களையும், CAA க்கு எதிராக அமைதியான போராட்டங்களில் பங்கேற்ற வடகிழக்கு டெல்லியின் பல பகுதிகளைச் சேர்ந்த பல ஆர்வலர்களையும் தில்லி காவல்துறை கைது செய்தது என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். ” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டெல்லி இனப்படுகொலைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக ஹைதர், மற்றும் சர்கார் இப்பகுதிக்கு சென்று வந்ததனர், இந்நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறிவைக்கப்படுவதாகவும் ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு கூறியுள்ளது.
மேலும் பல மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் தினசரி அடிப்படையில் காவல்துறையினரால் விசாரிக்கப்படுவதாகவும், இது ஒரு தொடர் கதையாகி விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய லாக்டவுன் அமலில் உள்ளது எனினும் இது “குடிமக்களின் உரிமைகளின் லாக்டவுன் இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும் ” என்றும், அதிகாரிகள் “துஷ்பிரயோகதில் ” ஈடுபடக்கூடாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களே கைது:
டெல்லி வன்முறையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் சிறுபான்மை சமூகத்தவரே, எனினும் கலவரத்தை ஒரு காரணமாக பயன்படுத்தி மேலும் மேலும் சிறுபான்மை சமூகத்தவர் வேட்டையாடப்படுகின்றனர். போலீசார் சிறுபான்மையினரையே கைது செய்து வருகின்றனர். கொரோனவை கட்டுப்படுத்தும் முகமாக நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து பல கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் டெல்லியில் முஸ்லிம் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என போலீசார் கைது வருவது சரி இல்லை எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கையொப்பமிட்டவர்கள் :
கையொப்பமிட்டவர்களில் இயக்குனர்கள் அபர்ணா சென், ஹன்சல் மேத்தா, அஸ்வினி சவுத்ரி, ஒனிர், விந்தா நந்தா, நீரஜ் கயவன், நடிகர்-இயக்குநர்கள் நந்திதா தாஸ், கொங்கொனா சென் சர்மா, நடிகர்கள் சுஷாந்த் சிங், ஜீஷன் அய்யூப், சந்தியா மிருதுல், இசை அமைப்பாளர் விஷால் தத்லானி மற்றும் பலர் உள்ளனர்.