இந்த மாத இறுதியில் முஸ்லிம்களுக்கு புனித ரம்ஜான் மாதம் ஆரம்பிக்க உள்ள நினலயில் சமூக விலகல் மற்றும் லாக்டவுன் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றால் சவுதி போன்ற இஸ்லாமிய நாடுகளில் கூட மக்கள் ஒன்று கூடும் விதமான அனைத்து மதகிரியைகளும் தடை செய்யப்படுவதாகவும், எனவே இந்தியாவிலும் அவ்வாறே வீட்டிற்குள் வழிபாடு செய்ய அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பல்வேறு மதத் தலைவர்கள், சமூக மற்றும் மத அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களின் அலுவலக பொறுப்பாளர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், லாக்டவுன் வழிகாட்டுதல்களை ஒழுங்காக பின்பற்றவது குறித்து அவர்களிடம் பேசியதாகவும் அப்பாஸ் தெரிவித்தார்.
‘நாட்டில் உள்ள முஸ்லிம்கள் ஏப்ரல் 8 மற்றும் 9 தேதிகளில் ஷப்-இ-பராத்தை வீட்டினுள்ளேயே அனுசரித்தனர். சமூக விலகல் வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது’. இந்நிலையில் ஏப்ரல் 24 அல்லது ஏப்ரல் 25 முதல் தொடங்கவிருக்கும் ரம்ஜான் மாதத்தில் “இப்தாரை” (நோன்பை துறப்பது) தங்கள் வீடுகளுக்குள் செய்து கொள்ளுமாறும், தராவிஹ் தொழுகை மற்றும் பிற மத சடங்குகளையும் வீட்டிற்குள்ளேயே செய்யுமாறும் பள்ளிவசால், ஈதுகாக்களுக்கு மக்கள் எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாட்டின் கோயில்கள், மசூதிகள், குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மத இடங்களில் உள்ள அனைத்து மத நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.