50 வயதான ஜபேதா பேகம் அசாமில் வசிப்பவர். அவரது கணவர் ஒரு நோயாளி, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக உள்ளவர். ஜபேதா உழைப்பில் தான் குடும்பமே உயிர் பிழைத்து கொண்டு இருக்கிறது. இவரை இந்தியர் இல்லை என்று அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
பல்வேறு ஆவணங்களை வைத்திருந்தும் கூட தான் ஒரு இந்தியர் தான் என நிரூபிக்க இன்று வரையில் அவரால் முடிய வில்லை. குவாஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கப்பெறாத இவரின் இறுதி முயற்சி உச்ச நீதிமன்றத்தில் நிறைவுறும். ஆனால் உச்சநீதிமன்றத்தில் கூட நீதி கிடைக்குமா என்பது தான் கேள்வி.
ஜபேதாவின் பரிதாப நிலை:
குவாஹாத்தியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள பக்ஸா மாவட்டத்தில், தொலைதூர கிராமம் ஒன்றில் ஜபேதா பேகம் வசிக்கிறார். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே உறுப்பினர் ஜபேதா மட்டுமே – அவரது கணவர் ரெஜாக் அலி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ளவர்.
இந்த தம்பதியருக்கு மூன்று மகள்கள், அவர்களில் ஒருவர் விபத்தில் இறந்து விட்டார், மற்றொருவர் காணாமல் போய்விட்டார். 5 ஆம் வகுப்பு பயிலும் இளைய மகள் அஸ்மினா மட்டுமே அவர்களின் ஒரே சொத்து.
அஸ்மினாவின் எதிர்காலம் தான் ஜபேதா பேகத்தை மிகவும் கவலையடையச் செய்கிறது.சம்பாதிக்கும் பணம் எல்லாம் வக்கீலுக்கு கொடுத்தே தீர்ந்து விடுவதால், சிறுமி அஸ்மினா சில சமயங்களில் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறாள். “எனக்குப் பிறகு அவர்களுக்கு என்ன நேரிடும் என்று எண்ணி அனுதினமும் கவலைப்படுகிறேன் … என் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்” என்கிறார் ஜபேதா பேகம்.
நீதிமன்றமாம்:
கோயாபரி கிராமத்தைச் சேர்ந்த ஜபேதா கடந்த 2018 ஆம் ஆண்டில் அசாமின் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தால் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டார். குவாஹாத்தி உயர் நீதிமன்றம், அதன் முந்தைய உத்தரவுகளில் ஒன்றை மேற்கோள் காட்டி, அவர் சமர்ப்பித்த ஆவணங்களை – நில வருவாய் ரசீது, வங்கி ஆவணங்கள் மற்றும் பான் அட்டை – குடியுரிமைக்கான உறுதியான ஆதாரம் அல்ல என்று அறிவித்து விட்டது. இதனால் கடந்த ஒரு வருடமாக அவர் மேற்கொண்ட அனைத்து பயணங்களும் வீணாகி விட்டது.
” என்னிடம் அனைத்தையும் நான் செலவிட்டு விட்டேன். இன்னும் இந்த சட்ட போராட்டத்தில் செலவிட என்னிடம் ஒன்றுமே மிச்சம் இல்லை ” என்று கூறி கண்ணீர் வடிக்கிறார் ஜபேதா.
தந்தையுடன் உறவை நிரூபிக்கவில்லை:
தீர்ப்பாயத்தில், அவர் தனது தந்தை ஜாபேத் அலியின் 1966, 1970, 1971 வாக்காளர் பட்டியல்கள் உட்பட 15 ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். எனினும் தந்தையுடனான அவரது உறவை ‘திருப்திகரமாக நிரூபிக்க வில்லை’ என தீர்ப்பாயம் கூறிவிட்டது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத நிலையில், அவர் தனது கிராமத் தலைவரிடமிருந்து ஒரு சான்றிதழை சமர்ப்பித்திருந்தார். அதில் ஜபேதாவின் பெற்றோர் மற்றும் அவரது பிறந்த இடம் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அதை தீர்ப்பாயமோ நீதிமன்றமோ ஏற்கவில்லை.
கிராம தலைவரின் சாட்சியம் :
“நான் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டேன், நான் அவளை அறிவேன் என்று கூறினேன், அவள் சட்டப்பூர்வ குடியிருப்பாளராக இருப்பதற்கு உறுதி அளித்தேன் … மக்கள், குறிப்பாக திருமணமான பெண்கள் வேறு இடங்களில் இருந்து வந்தவர்களுக்கு நிரந்தர குடியிருப்பாளர்கள் என்பதை நிரூபிக்க ‘காவ்ன் புரா’ என்ற சான்றிதழை நாங்கள் வழங்குகிறோம்,” என்று கிராமத்தின் தலைவரான கோலக் கலிதா கூறுகிறார்.
ஜபேதா பேகமின் பெற்றோர் பிரம்மபுத்திராவின் மண் அரிப்பால் நிலத்தை இழந்த பின்னர் ஹஜோவிலிருந்து பக்ஸாவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.
“டி” வாக்காளர்கள்:
கடந்த ஆண்டு அசாமில் வெளியிடப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் இவர் குடும்பம் இடம் பெறவில்லை. கணவன்-மனைவி இருவரும் “சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள்” என்று குறிக்கப்பட்டனர்.
சந்தேகத்திற்கிடமான அல்லது சந்தேகத்திற்குரிய வாக்காளர் என்பது அசாமில் உள்ள ஒரு வகை வாக்காளர் பிரிவாகும். இவர்கள் முறையான குடியுரிமை நற்சான்றிதழ்கள் இல்லாதவர்கள் என அரசாங்கத்தால் விலக்கப்படுகிறார்கள். டி வாக்காளர்கள் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் சிறப்பு தீர்ப்பாயங்களால் தீர்மானிக்கப்படுகிறார்கள், மேலும் டி வாக்காளராக அறிவிக்கப்பட்ட நபருக்கு வாக்காளரின் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை.
அனைத்தையும் இழந்து நிர்கதியாய்:
ஜபேதாவிடம் இருந்த 3 நிலங்களையும் வழக்கறிஞர் கட்டணம், சட்ட போராட்டம் என்ற பெயரால் இழந்து விட்டார். தற்போது அவர் மற்றொருவர் நிலத்தில் நாளைக்கு 150 ருபாய் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்.
“எங்களைப் பொறுத்தவரை, நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டோம். மரணம் மிக அருகில் உள்ளது” என்று அவரது கணவர் ரெஜக் அலி கூறுகிறார்.
ஜபீதா பேகமின் கஷ்டங்கள் அசாமில் உள்ள பலரைப் போலவே உள்ளது. அம்மக்கள் வறுமைக்கும் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய அவசியத்திற்கும் இடையில் சிக்கி தவிக்கின்றனர்.
என்.ஆர்.சி- பெயர் பட்டியலில் இடம்பெறாதவர்களுக்கு மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள் மூலம் சட்ட உதவி வழங்கபடும் என்று மத்திய அரசு அறிவித்தது, அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
ஊர் தலைவர் சாட்சி இருந்தும், 15 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தும் இந்த பெண்ணிற்கே இந்த நிலை என்றால் ?