Delhi Political Figures

‘கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி ‘ என்ற பாஜகவின் பிரச்சாரத்திற்கு கெஜ்ரிவாலின் மனைவி மற்றும் மகள் பதிலடி ..

சனிக்கிழமை நடக்கவுள்ள டெல்லி சட்டசபை தேர்தலின் ஒரு யுக்தியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என கூறி பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளிக்கும் முகமாக அவரது மனைவி மற்றும் மகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் . “இது ஒரு புதுவித தரங்கெட்ட அரசியல்” என பதிலடி அளித்துள்ளனர்.

தரம் தாழ்ந்த கருத்து :

ஜனவரி 25 ம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சருக்கு இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் பாஜகவின் டெல்லி எம்.பி. பர்வேஷ் வர்மா. “இந்து பெண்கள் முஸ்லீம் ஆண்களால் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்களை நாம் கேள்விப்படுகிறோம் … கெஜ்ரிவால் போன்ற பயங்கரவாதிகள் எல்லா இடங்களிலும் மறைந்துள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. நாங்கள் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் போரிடுவதா அல்லது கெஜ்ரிவால் போன்ற பயங்கரவாதிகளுடன் போரிடுவதா? “என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

மத்திய அமைச்சரின் கருத்து :

பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இந்த கருத்தை மீண்டும் கூறினார். “டெல்லியின் வாக்காளர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலிடமிருந்து விலகிச் செல்ல ஒரு காரணம் இருக்கிறது. கெஜ்ரிவால் ஒரு அப்பாவி முகத்தை உருவாக்கி, ‘நான் ஒரு பயங்கரவாதியா?’ என்று கேட்கிறார் – ஆம் நீங்கள் ஒரு பயங்கரவாதி தான், அதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. நீங்கள் ஒரு அராஜகவாதி என்று நீங்களே சொல்லியிருந்தீர்கள்; அராஜகவாதிக்கும் பயங்கரவாதிக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை “என்று ஜவடேகர் கூறினார்.

கெஜ்ரிவால் மகள் பதிலடி:

” … எனது சகோதரர், தாய், தாத்தா பாட்டி மற்றும் என்னையும் காலை 6 மணிக்கு எழுப்பி, பகவத் கீதை படிக்க செய்துவந்தார் .. அது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. இது பயங்கரவாதமா? .. அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுவார்கள், ஆனால் இது ஒரு புதுவிதமான தரங்கெட்ட அரசியல் … குழந்தைகளை கல்வி கற்றவர்களாக ஆக்குவது பயங்கரவாதமா ? ”

“அவர்கள் எந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமானால் முன்வைக்கட்டும், அவர்கள் 200 எம்.பி.க்களையும் 11 முதலமைச்சர்களையும் அழைத்து வரட்டும். ஆனால் எங்கள் பிரச்சாரத்தில் நாங்கள் மட்டுமல்ல … இரண்டு கோடி பொது மக்களும் (ஆம் ஆத்மி கட்சிக்காக) பிரச்சாரம் செய்கிறார்கள்.

மக்கள் பாஜக வின் குற்றச்சாட்டுகளை நம்பி வாக்களித்தார்களா அல்லது கெஜ்ரிவால் செய்துள்ள பணியின் அடிப்படையில் வாக்களித்தார்களா என்பதை அவர்கள் பிப்ரவரி 11 ஆம் தேதி பார்ப்பார்கள் … ” என்று 24 வயதான கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்..

கெஜ்ரிவால் பதிலடி:

நான் எந்த வகையில் ஒரு பயங்கரவாதி? அவர்கள் என்னை எப்படி ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்த முடியும்? டெல்லி மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன். நான் அவர்களின் மூத்த மகனாக பணியாற்றியுள்ளேன்.

அவர்களுக்கு இலவச நீர், மின்சாரம், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற நல்ல வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளேன். இனி நான் யார் என்பதை முடிவெடுக்க மக்களிடம் விட்டுவிடுகிறேன் ”என்று முதல்வர் கெஜ்ரிவால் பதிலடி தந்துள்ளார்.