நேற்று (29-12-19) ஆர்எஸ்எஸ் /பாஜக வை சேர்ந்த 8 நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று மேற்கு வங்கத்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயதில் கையெறி குண்டுகளை வீசியும் அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளதாகவும் தேவாலய நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் தேவாலயத்திற்குள் மக்கள் இருந்ததாகவும் குண்டு சப்தத்தை கேட்டு பயந்த ஓடிய பிறகு அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பகவான்பூரில் மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உள்ளூர் பாஜக/ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த எட்டு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு தேவாலயத்தின் ஆயர் அலோக் கோஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் உள்ள தேவாலயங்களில் மீது நிகழ்த்தப்பட்ட பல தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, எனினும் மேற்கு வங்கத்தில் இவ்வாறு நடப்பது இதுவே முதன் முறையாகும்.
சனிக்கிழமை நண்பகலில் வழிபாட்டாளர்கள் தேவாலயத்திற்கு வந்திருந்தபோது, திடீரென கட்டிடத்திற்கு வெளியே இரண்டு குண்டுகள் வெடித்துள்ளது. அச்சத்தில் மக்கள் தப்பி ஓடியபோது, குண்டர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்து நாற்காலிகள், மேசைகள், ஜன்னல்கள், ஒலி பெருக்கிகள் என அனைத்தையும் அடித்து நொறுக்கினர். கிறிஸ்துவ மத போதகரின் காரையும் விட்டு வைக்காத அந்த காட்டு மிராண்டி கும்பல் 15 நிமிடங்களில் வேலையை முடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.