மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரவாக செய்யப்பட்டு வருவதால் சிறுபான்மை சமூகத்தவரின் வாக்குகளை இழக்க நேரிடுகிறது என அ.தி.மு.க முன்னாள் எம்.பி.யும் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு செயலாளருமான அன்வர்ராஜா கூறியுள்ளார்.
CAA வுக்கு அ.தி.மு.க. ஆதரவு:
குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் ஓட்டெடுப்புக்கு வந்தபோது இந்த மசோதாவை ஆதரித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்ததால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா 125 வாக்குகளை பெற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவை எதிர்த்து 105 பேர் வாக்களித்தனர்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. காத்து வரும் அமைதி, அவர்கள் கருத்துக்களை ஆமோதிக்கும் வகையில் இருப்பதாக குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடும் மக்கள் நினைக்கிறார்கள்.
முத்தலாக் சட்டம் :
முத்தலாக் சட்ட முன் வடிவு பாராளுமன்றத்தில் கொண்டுவந்தபோது நான் எதிர்த்து குரல் கொடுத்தேன். தற்போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அ.தி.மு.க.வுக்கு பெரும் இழப்பு:
மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக அ.தி.மு.க. அரசு செயல்படுவதால் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளை அ.தி.மு.க. இழந்து வருகிறது. இது அ.தி.மு.க.வுக்கு பெரிய இழப்பாகும். எனவேதான் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சம் :
பல்வேறு மாநிலங்கள் இந்த குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறிவிட்டன.
அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே NRC நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்ற அச்சம் இஸ்லாமிய மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு:
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் இறையாண்மை மற்றும் மதசார்பின்மைக்கு பாதிப்பு வந்துவிடும். எனவே அ.தி.மு.க. மத்திய அரசின் இந்த சட்டத்தை எதிர்த்தால் தற்போது நடந்து வரும் போராட்ட எதிர்ப்பு என்ற நெருப்பை அணைக்கும் தண்ணீர் போல மக்களின் மனதில் அ.தி.மு.க. நீங்கா இடம்பெறும்.
இதற்காக அ.தி.மு.க. தலைமை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான் சிறுபான்மை மக்களின் உணர்வாக உள்ளது.
இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.