குடியுரிமை சட்ட திருத்த மசோத இரு அவைகளிலும் நிறைவேற்றப் பட்டால் அமித்சா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், சட்டத்திருத்த மசோதாவுக்கு அமெரிக்க சர்வதேச மதச்சுதந்திர ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் சர்வதேச மதச் சுதந்திரத்துக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மிகுந்த கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக உள்ளது.
இந்தச் சட்டமசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க அரசு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். மதத்தை அடிப்படையாக கொண்டு அமித்ஷா தாக்கல் செய்த மசோதா கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா என்பது தவறான திசையில் எடுக்கப்பட்ட மோசமான திருப்பமாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு வரலாற்றுத்தன்மை கொண்ட இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் எதிரானது.
இந்தியக் குடிமகன்களுக்கு, அந்நாட்டு அரசு மதச் சோதனை நடத்துகிறது. அது ஏராளமான இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறிக்கும் என்று அமெரிக்காவுக்கான சர்வதேச மதச் சுதந்திர அமைப்பு கவலை கொள்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் யூ.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்பின் அறிக்கை மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.