Gaumata Nepal

லட்சக்கணக்கில் விலங்குகளை பலி கொடுக்கும் உலகின் மிகப்பெரிய கோவில் திருவிழா!

உலகின் மிகப்பெரிய உயிர்ப்பலி திருவிழா – நேபாள நாட்டின் தேவி காதிமயி காளிக்காக ..

நேபாளின் தெற்கு மாவட்டமான பர்ராவின் பரியாப்பூரில் உள்ளது தேவி காதிமயி ஆலயம். இங்கே குடியேறியவர்கள் குறிப்பாக வட இந்திய பிராந்தியங்களான உபி, பிஹார்,இமாச்சல் மற்றும் கஷ்மீர் பகுதியில் இருந்து கிபி.18ம் நூற்றண்டில் போனவர்கள் தான். இவர்களை கடந்த 2013ம் ஆண்டு வரை தேராய் மக்கள் என பிரித்து வைத்திருந்தது. நேபாளிகள் வேறு தேராய் வேறு என்று இருந்த நிலையில் சமீபத்தில் அவர்களையும் தங்களது குடிமக்களாக நேபாள அரசு ஏற்றுக்கொண்டது.

சரி தேராய் மக்கள் என்போர் யாரென பார்த்தால் அவர்களை தங்களுக்கு தாங்களே மாதேஷி மக்கள் என அவர்கள் அழைத்துக்கொள்கின்றனர். மாதேஷி என்பது மத்திய- தேஷ் அதாவது இந்தியாவின் விந்திய-சாத்புரா மலைகளில் வாழ்ந்தவர்கள் என பொருளாம். இவர்களில் இந்து பிராமணர்கள், தலித்துகள், மத்திய தர இந்து அல்லாத பழங்குடிகள், போஜ்பூரிகள், மித்தாலிகள், பிஹாரிகள் மற்றும் சில வணிக குழு முஸ்லிம்களும் உண்டு. இவர்கள் அனைவருமாக ஒன்றிணைந்து வாழ்கின்றனர். இவர்கள் காளியின் ரூபமாக வழிபடும் காதிமை தேவிக்கு மகரசங்கராந்தியின் நெருக்கத்தில் கொடுக்கப்படும் பலிகொடுப்பு விழா தான் காதிமை திருவிழா. உலகில் 5 மில்லியில் இந்துக்கள் இணைந்து நடத்தும் மிகப்பெரும் பலிகொடுக்கும் பெருவிழா.

தேவி காதிமயி ஆலயம்

ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் இறுதி வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை நடக்கும் இந்த விழாவினை தடை செய்யக்கோரி கடந்த 2009ம் ஆண்டு முதல் உலகநாடுகள் அனைத்தும் குரல் கொடுத்து வருகின்றனர். காரணம் இத்திருவிழாவில் கணக்குவழக்கின்றி மானாவாரியாக விலங்குகள் கொல்லப்படுகின்றன என்பதால் தான். ஒருவாரம் நடக்கும் இந்த திருவிழாவில் ஒரே நாளில் சுமார் 25,00,000 கால்நடைகளும் 5,00,00 பறவையினங்களும் ஒரே அடியாக பலி கொடுக்கப்படுகின்றன.

இங்கே பலி பிராணிகளாக பக்தர்கள், எருமை,ஆடு,பன்றி,முயல் மற்றும் அங்குள்ள ஒரு குள்ளவகை ஒட்டகம் ஆகியவற்றையும், புறா,கோழி,சேவல் போன்ற பறவைகளையும் கொண்டு வந்து காளிக்கு பலி கொடுக்கின்றனர். இந்த பலிப்பிராணிகளின் மாமிசங்களை சமைத்தும் உண்கின்றனர் இதில் பிராமணர், தலித் என்ற வேறுபாடு கிடையாது. பலிபிராணிகளை வெட்டுவதற்கென்றே 300 பூசாரிகள் இருப்பார்கள். கிட்டதட்ட 300 ஆண்டுகாலமாக கொண்டாடப்படும் இந்த திருப்பலி திருவிழாவிற்கான ஐதீகம், பனியில் உறைந்து போகும் காளி தேவியை பலிபிராணிகளின் ரத்தத்தை ஓட்டி கதகதப்பு கொடுக்கிறார்களாம்.ஆனால் இதன் ஒரிஜினல் கதை யாருக்கும் தெரியவில்லை.!

இந்த திருவிழா மிருக உரிமைச்சட்டங்களுக்கு எதிரானது என கூறி கடந்த 2009 முதலே இந்தியாவிலிருந்து கண்டனக்குரல்கள் எழுந்துகொண்டிருந்த நிலையில் இந்திய கால்நடைகளை நேபாளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது அப்போது அங்கே 20 லட்சம் கால்நடைகளும் பறவைகளும் பலியிடப்பட்ட போதும் பலிப்பிராணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், விவசாயிகளை தங்களது கால்நடைகளை விலைக்கு விற்குமாறு மைக் போட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. 5,000 மதிப்புள்ள ஆட்டினை 15,000 கொடுத்து வாங்கவும் மக்கள் தயாராக இருந்தனர். பிஹாருக்கு மிக அருகில் இம்மாவட்டம் இருப்பதால் நேபாளிகளை விட இந்தியர்களே அங்கே அதிக பார்வையாளர்களாக செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014, மோடி அரசு அமைந்த பிறகு இந்த பலித்திருவிழாவினை தடுத்து நிறுத்த மேனகா காந்தியின் பெரும் முயற்சியில் தடை கோரப்பட்டது. பீட்டா நிறுவனத்தின் தலைவர் மிமி பெக்கேச்சி மற்றும் உலக பிராணிகள் நல அமைப்பின் தலைவி பிரிகெட் பர்தௌத் தலைமையில் பர்ரா மாவாட்டத்திற்கு ஒரு குழு புறப்பட்டுச்சென்று இந்த திருவிழாவினை தடைசெய்யக்கோரி வேண்டுதல் வைக்கப்பட்டது. நேபாளத்தில் தன்னை புத்தரின் மறுபிறவி என அழைத்துக்கொள்ளும் ராம் பகதூர் போம்ஜன் என்பவரை அணுகி மக்களிடம் அமைதியை பிரச்சாரம் செய்து கால்நடைகளின் உயிர்பலியின்றி திருவிழா நடத்தக்கோரி மக்களிடையே போதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் அவர் எவ்வளவு முயன்றும் பக்தியால் ஆட்பட்ட மக்கள், அரசு செய்த பிரச்சாரத்தையோ, அமைப்புகளின் அறிவுறுத்தலையோ, பௌத்த தலைவரின் போதனைகளையோ மதிக்கவில்லை. அவர்கள் தாங்களாகவே கால்நடைகளை கொண்டு வந்து பலிகொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

தேவி காதிமயி ஆலயம்

இதுபற்றி கருத்து தெரிவித்த உள்ளூர் பூசாரி ஒருவர், நூற்றாண்டு காலமாக நடைபெறும் இந்த சடங்குகளை மக்கள் கைவிடமாட்டார்கள், இங்கே நிறைய ஏழைகளுக்கு இலவச உணவு கிடைக்கிறது. இங்கே பகிரப்படும் இறைச்சியை அவர்கள் அடுத்த மாதங்களுக்கு சேமித்து வைத்து உண்ண முடியும். இதனை தடை செய்ய அரசு எத்தனை முயற்சியெடுத்தாலும் அதை மக்கள் கேட்பதாக இல்லை. இந்த விலங்குகள் அமைப்பினருக்கு என்னதான் வேண்டும், எங்களுடைய இந்துமத சடங்குகளை இவர்கள் ஏன் தடுக்க வேண்டும். மிருகங்களுக்கான உரிமையை நிலைநாட்ட இவர்களை அந்த மாகாளி நியமித்தாரா..?

இத்தனை லட்சக்கணக்கில் கால்நடைகளை பலியிட்டாலும் கூட அவற்றின் ஜனத்தொகை ஒன்றும் அழிந்துவிடவில்லையே… இது மிக கொடுமையானது எனில் இங்கே லட்சக்கணக்கில் கூடும் மக்களுக்கு மனதில் இறக்கமில்லையா என்ன? அவர்களும் பார்வையாளர்களும் விரும்பி வருவதில் இருந்தே இது மக்களுக்கானது என இவர்கள் உணர வேண்டும் என்றார் காட்டமாக.

இந்த ஆண்டும் மிக கோலாகலமாக இந்த திருவிழா நடந்து முடிந்துவிட்டது. இந்துமத நம்பிக்கையில் கை வைத்தால் நாங்கள் சும்மாயிருக்க போவதில்லை என கூறிய நேபாள நாட்டு பூசாரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தானாம்!..

ஆக்கம் : நஸ்ரத்