NRC

குடியுரிமை சட்ட திருத்த மசோதா முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்துகிறதா ?

மத்திய அமைச்சரவை (கேபினட்) கடந்த புதன் கிழமை அன்று இந்திய குடியுரிமை சட்ட மசோதாவில் (சிஎபி) சில முக்கியமான மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. மோதி பிரதமராக பதவியேற்ற முதல் 5 ஆண்டுகளிலேயே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பாஜக முன்னெடுத்தது. அதை நிறைவேற்றுவதற்கு பிரயத்தனம் செய்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்தவாரம் மீண்டும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இம்முறை நிறைவேற்றப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா (சிஎபி) எதனை முன்மொழிகிறது? எதனால் இந்த சட்டம் கூடுதல் சர்ச்சையை சந்தித்திருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்றால் என்ன..??

இந்த மசோதாவின் பெயரிலேயே உள்ளது போல் இந்திய குடியுரிமையின் விதிகளை வகுக்கும் 1955ம் ஆண்டின் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர முயலுகிறது மத்திய பாஜக அரசு.

இந்த சட்டமானது ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகளிலிருந்து நாடு துறந்த இந்துக்கள், ஜைனர்கள், புத்தர்கள், கிருஸ்துவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிக்கள் (அதாவது முஸ்லிம்களை தவிர உள்ள மற்ற அனைத்து மதத்தவர்) சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்திருந்தாலும் அதை “சட்ட விரோத குடியேற்றமாக கருத முடியாது” என்கிறது.

இந்தியாவின் தற்போதைய விதிகளின்படி “சட்ட விரோத குடியேறிகள்” இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. இப்படி குடியேறியவர்கள் ஆவணங்களுடன் குடியேறி இருந்தாலும் சரி, ஆவணங்களின்றி குடியேறி இருந்தாலும் சரி அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது. ஆவணங்களுடன் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள் தொடர்ந்து தங்க வேண்டுமெனில் தங்களது விசா காலத்தை நீட்டித்துக் கொண்டு தங்கிக் கொள்ளலாம்.

இந்துத்துவ அமைப்புகளின் இந்து ராஷ்டிரா கனவு

ஒருவேளை குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுமானால்.., மேலே குறிப்பிடப்பட்ட முஸ்லிம் அல்லாதோர் தற்போது அமலில் உள்ள சட்ட வரம்பிற்குள் உட்பட மாட்டார்கள். இதனால் வங்க தேசத்து இந்துக்கள் (இந்த அரசியல் சட்டத்தின் முக்கிய இலக்கு இவர்கள் தான்) சட்ட விரோதமாக இந்திய எல்லை தாண்டி வந்திருந்தாலும் அல்லது விசா காலத்தை கடந்து இங்கே வசிப்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பிக்கலாம்.

இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்பது மேற்சொன்ன குறிப்பிட்ட சமூகங்கள், குடியுரிமை பெறுவதற்கான இயல்பான காத்திருப்பு நேரத்தையும் குறைக்கிறது. இப்போதுள்ள சட்டத்தின் படி கடந்த 14 ஆண்டுகளில் 11ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் தான் குடியுரிமை பெற முடியும். ஆனால் தற்போது வெறும் ஆறு வருடங்கள் இந்தியாவில் வசித்தவர்களாக இருந்தாலே போதும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

மேலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக அவர்கள் மீது வழக்குகள் ஏதும் இருந்தாலும் கூட , அவர்கள் இந்திய குடிமகனாக மாற தகுதி பெற்றவர்களாக இருந்தால் போதும் அவர்களின் மீதுள்ள அனைத்து வழக்குகளும் நீக்கப்படும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.., மேலே அடையாளம் காணப்பபட்ட சமூகங்களின் பட்டியலில் முஸ்லிம்கள் இடம்பெற வில்லை என்பது தான்.

மத அடிப்படையிலான குடியுரிமை சட்ட திருத்த மசோதா, ஏன் ?

மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை கிடைக்கப்பெறும் விதமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதே கருத்தை தான் மற்ற பாஜக எம்பிகளும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் கூறியுள்ளனர்.

எனினும் எவரது விளக்கமும் மசோதாவில் காணப்படும் குறைபாடுகளுக்கு பதில் அளிப்பதாக இல்லை. உதாரணமாக, இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மியான்மர் நாட்டு சிறுபான்மையினரான ரோஹிங்கிய முஸ்லிம்கள் ( இவர்கள் தான் உலகிலேயே மதத்தின் பெயரால் மிக மோசமாக இன அழிப்பிற்கு ஆளானவர்கள்) பட்டியலில் சேர்கப்படவில்லை. ஆனால் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளாத ஆஃப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது . மேலும் இலங்கை நாடும் இந்தப் பட்டியலில் இல்லை. இலங்கை அரசால் அதிகமான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் (அவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்) ஆனாலும் இலங்கை பட்டியலில் சேர்க்கப்படவில்லை..

ரொஹின்யா அகதிகள் – Photo Credit: Al-Jazeera

முஸ்லிம் நாடுகளில் உள்ள மாற்று மதத்தவர் அதிலும் குறிப்பாக இந்துக்களை இந்த அரசு அரவணைக்கும் என்று கூறுவதால் மிக பெரும் அரசியல் ஆதாயம் பெறமுடியும். மேலும் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் பாஜகவின் கனவு திட்டத்திற்கும் இது உறுதுணையாக இருக்கும் என்பதால் தான் பாஜக குடியிருமை சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர துடிக்கிறது.

கொத்து கொத்தாக இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள்

பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களை காலவரையின்றி தங்க வைப்பதற்காக மோதி அரசாங்கம் கடந்த 2015 செப்டம்பர் 7ம் தேதி அன்று இந்திய சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

தேசிய குடியுரிமை மசோதா NRC யோடு எப்படி தொடர்புடையதாகிறது..??

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 2014 முதல் 2019 வரை அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான வேலை நடைபெற்றது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதே இதன் அடிப்படை நோக்கம். இதற்கு பாஜக விடமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்தது, நீதிமன்ற உத்தரவின் பெயரால் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக பாஜக கடுமையான போக்கை எடுக்க துவங்கியது.

ஆனாலும் அஸ்ஸாமில் கொண்டுவரப்பட்ட என்ஆர்சி. பாஜக அரசியலுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் என்ஆர்சி பட்டியலில் இருந்து விடுபட்ட நபர்களில் அதிகமாக இந்துக்களின் பெயர்கள் இருந்தன. இதனால் தான் பாஜக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஒரு தீர்வாக முன்வைத்துள்ளது. அஸ்ஸாமில் என்ஆர்சியில் விடுபட்ட இந்துக்கள் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவின் மூலம் குடியுரிமை பெற முடியும் என பாஜக தலைவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அது எப்படி என்பது தான் தெளிவாக்கப்படவில்லை.

என்ஆர்சி தேசிய அளவில் அமல்படுத்தப் போவதாக மத்திய அரசு மிரட்டி வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் முஸ்லிம்கள் மட்டுமே குடியுரிமையை இழப்பார்கள் என அஞ்சப்படுகிறது. ஏனெனில் என்ஆர்சியில் பெயர் விடுபட்ட இந்துக்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவின் மூலம் மீண்டும் குடியுரிமையை பெற்றுக் கொள்ள முடியும். அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக உயர்மட்ட தலைவர்கள் “இந்துக்கள் என்ஆர்சி பற்றி கவலைப்படத் தேவையில்லை” என வெளிப்படையாக தெரிவித்துள்னர்.

நன்றி: ஸ்க்ரோல்