“இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணில்லாத வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நீங்கள் குடியுரிமையை வழக்குவதாக இருந்தால் அதை நாங்கள் ஏற்று கொள்வோம். அதை விடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் (சிஏபி) மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த ஒரு அடிப்படையிலோ மக்கள் மத்தியில் பாகுபாடு காட்டினால் அதனை நாங்கள் இறுதி வரை எதிர்ப்போம். இதனால் நாங்கள் தனித்து விடப்பட்டாலும் சரியே.” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முழங்கியிருக்கிறார்.
“தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கான (சிஏபி) எதிர்ப்பானது நம் நாட்டின் இரண்டாம் சுதந்திரப் போராக அமையும். அதனை தலைமை தாங்கி வழிநடத்தவும் நான் தயார்.” என்று கடந்த வெள்ளிக் கிழமையன்று (5-12-19) மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
“இது நமது தேசத்தின் இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக மாறும். நாம் போராடியே ஆக வேண்டும், நாம் போராடியே தீருவோம். இறுதி கட்டம் வரை போராடுவோம். இத்தனை காலமாக மக்களை வழிநடத்தி வந்துள்ளோம். இந்த முறையும் (இந்த பிரச்னையிலும்) வழி நடத்துவோம். அதுவும் முன்னிருந்து வழி நடத்துவோம். இதன் (என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றின்) இயல்பு தன்மையும் சாராம்சமும் பாபசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய நம் நாட்டின் அரசியலமைப்புக்கே எதிரானது.” என்று மயோ சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அருகில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மம்தா பானர்ஜி முழங்கினார்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமும் அம்பேத்கர் நினைவு தினமும் ஒருங்கே டிசம்பர் 6 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட சன்ஹதி திவாஸ் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் மம்தா பானர்ஜி இவ்வாறு உரையாற்றியுள்ளார்.
என்ஆர்சி மற்றும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைப் பற்றி பொதுவெளியில் பரபரப்பை ஏற்படுத்துவதன் மூலம் அடிப்படை பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை போன்றவற்றிலிருந்து மக்களை திசை திருப்ப பாஜக அரசு முயற்சிப்பதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
நீங்கள் உங்கள் உடலின் கையையோ, காலையோ துண்டிப்பீர்களானால், உங்கள் உடலால் எப்போதும் போல சரிவர இயங்க முடியாமல் போகும். அதே போல தான் மதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு எந்த அடையாளத்தின் அடிப்படையிலோ நீங்கள் -உடலில் (நாட்டில்) வேறுபாடு காட்ட ஆரம்பித்தாள் நம் நாடு இத்தனை ஆண்டுகளாக எப்படி இருந்து வந்ததோ அப்படிபட்ட நாடாக இருக்காது. என்ஆர்சி என்பது உடலில் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பதற்கு சமானம் . சிஏபி என்பதோ உடலில் தலையை துண்டிப்பதற்கு சமானம் என்று அவர் மேலும் கூறினார்.
1947 அல்லது 1971 ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் மக்களின் குடியுரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? ஒரே இரவில் இவர்கள் அனைவரையும் அந்நியநாட்டவர் என எப்படி அறிவிப்பீர்கள்.? 6 ஆண்டுகள் வரை அந்நிய நாட்டவராக தங்க வைப்பீர்கள், பிறகு சில பாகுபாடான சட்டங்களின் அடிப்படையில் சிலருக்கு மட்டும் குடியுரிமையை வழங்குவீர்கள்? இதையெல்லாம் முக்கியத்துவத்துடன் மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாஜக எதிர்பார்கிறதா? மேற்குவங்கத்தில் என்ஆர்சி யை ஒருபோதும் அமல்படுத்த விட மாட்டோம்.
மேலும் இந்தியா போன்றதோர் மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையிலான குடியுரிமை ஒருபோதும் வழங்கப்பட கூடாது என மம்தா கூறினார் என்று அவர் காட்டமாக கூறியுளளார்.
மம்தா பானர்ஜி மட்டுமின்றி பாஜக தவிர்த்துள்ள அனைத்து கட்சி மற்றும் சமூக தலைவர்களும் ஒன்றுபட்ட குரலில் முழங்குவார்களானால், இந்த மக்கள் சக்திக்கு முன் ஃபாசிசம் வீழ்ந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.