2016-ஆம் ஆண்டில் 16 வயது சிறுமியை போதைப்பொருள் செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பனாஜி பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ அடனாசியோ மான்சரேட் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு IPC 376 (கற்பழிப்பு) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் பிரிவு (போக்ஸோ) சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணை அக்டோபர் 15 முதல் தொடங்கும் என கடந்த வியாழன்று கோவா வடக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாபுஷ் என்று பிரபலமாக அழைக்கப்படும் மான்செரேட், கோவாவில் எம்.எல்.ஏ. பதவி வகித்து வரும் நிலையில் போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் நபர் ஆவார். அவர் மீது பாலியல் பலாத்காரம், தவறான முறையில் ஒருவரை அடைத்துவைத்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மான்செரேட் கூறுகையில் ” நான் இந்த களங்கத்துடன் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறேன், இந்த சோதனையின் முடிவில் என் மீதான களங்கம் நீங்கும்.2 ஆண்டுகள் ஓடி விட்டன எனினும் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் கூட முழுமையாக தொகுக்கப்படவில்லை. நீதி வெல்லும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் முன் சட்ட ஆவணங்களை ஆய்வு (!) செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தார் .