கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் இன்று, 24/08/2019 மாலை கோவை மாநகர காவல்துறை ஆணையர் அவர்களை கோவை மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அவர்கள் கூறும்பொழுது தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் நேற்று நாடு முழுவதும் ஊடகங்கள் வாயிலாக வெளியானது. அதிலும் குறிப்பாக கோவையில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற செய்திகள் பத்திரிக்கைகள் டிவி சேனல்கள் மூலமாக பரப்பப்பட்டன. ஒருசில ஊடகங்களில் தீவிரவாதிகளுடைய புகைப்படம் மற்றும் வாகன எண் உட்பட பல்வேறுபட்ட அடையாளங்களுடன் செய்திகளை வெளியிட்டன. இது கோவை வாழ் மக்களிடையே பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு பலமுறை தமிழகத்தை தகர்க்க சதி! கோவையை தகர்க்க சதி! என்றெல்லாம் செய்திகள் வந்ததே? எத்தனை தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள்? அவர்களின் பின்னணிகள் கண்டறியப்பட்டதா? இதற்கு முன்னர் இந்தியன் முஜாஹிதீன் என்பன உள்ளிட்ட பல பெயர்களில் ஊடுருவிய பயங்கரவாதிகள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டனரா?
அவர்கள் பெயரில் இப்போது ஏன் எந்த மிரட்டலும் வருவதில்லையே? அரசுக்கு ஒரு இக்கட்டான சூழல் ஏற்படும் போதும் மட்டும் ஏன் இத்தகைய ஊடுருவல் நடக்கிறது? உளவுத்துறை சொல்வதை பரபரப்பு செய்தியாக வெளியிடுவது மட்டும் தான் ஊடகங்களின் பணியா? சரி, இப்படி ஒரு செய்தியை பரப்ப வேண்டிய காரணம் என்ன?
இதுபோன்ற செய்திகளால் சமீபத்தில் மத்திய அரசினால் செயல்படுத்தப்பட்ட காஷ்மீர் மறுகட்டமைப்பு மசோதா சட்டபிரிவு370 ரத்து மற்றும் அங்கு நடைபெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை திசை திருப்பவும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மறக்கடிக்கச் செய்வதற்காகவும், மேலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், யு ஏ பி ஏ சட்ட திருத்த மசோதா மற்றும் என் ஐ ஏ அமைப்பிற்கு வழங்கப்பட்ட எல்லையற்ற அதிகாரம் போன்ற சட்டங்களை பற்றிய அச்சத்தையும், மறக்கடிக்கும் விதமாக இது போன்ற நிகழ்வுகளை மத்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே சந்தேகிக்கப்படுகின்றது.
எனவே இது போன்ற செய்திகள் இஸ்லாமிய சமூகத்தை பிற சமூகமக்களிடமிருந்து அன்னியப்படுத்தக்கூடிய விதமாக இருக்கிறது. இதில் மத்திய பாஜக அரசின் சதி இருபதாக இந்தக் கூட்டமைப்பு கருதுகிறது. மேலும் சில ஊடங்கள் தீவிரவாதியின் புகைப்படம் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பாக்கின. காவல்துறை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை என மற்றொரு ஊடகத்தில் டி.ஜி.பி. மறுப்பு தெரிவித்த செய்தி வெளியாகிறது. இதேபோல் கோவை ஆணையாளர் திரு.சுமித்சரண் அவர்களும் இது வதந்திதான் என்று அறிக்கை வெளியிடுகிறார்.
உண்மை நிலை என்ன? இந்த புகைப்படம் ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி? ஒரு நாட்டிற்குள் நுழையும் தீவிரவாதி தனது புகைப்படம், அவர் பயணிக்கும் கார் எண் இவற்றை உளவுத்துறைக்கு கொடுத்து விட்டுதான் நுழைவானா?
எனவே இதுபோன்ற நிகழ்வுகளில் எங்களுக்கு பலமான சந்தேகம் எழுகின்றது. ஆகவே, இதுகுறித்த உண்மை நிகழ்வுகளை கோவை மாநகர காவல் துறையும் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியரும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்வதோடு, பயங்கரவாதத்திடமிருந்து நாட்டை காப்பதிலும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில் மக்களுக்கு பீதியும் பயமும் ஏற்படாதவாறு காவல்துறையினர் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளவேண்டும் மக்களுக்கு இந்த நிகழ்வின் உண்மைத்தன்மையை காவல்துறை அறிவிக்கவேண்டும். கோவைவாழ் மக்கள் மதநல்லிணக்கத்தோடு அண்ணன் தம்பிகளாய் ஒற்றுமை உணர்வோடு வாழக்கூடிய தருணத்தில் இதுபோன்ற செய்திகள், சமுகநல்லினதிற்கு குந்தகம் விளைவிப்பதாக இக்கூட்டமைப்பு கருதுகிறது.
எனவே மதநல்லிணக்கதை கெடுக்கும் விதமாக வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் கோவை குறித்து பரப்பப்படும் வீண் வதந்திகளை மற்ற மாவட்ட மாநில மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இந்த சந்திப்பில் கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.