Dalits

டில்லியில் 500 ஆண்டு கால பழமைவாய்ந்த தலித் சமூகத்தினர் கோயில் இடிப்பு- தலித் அமைப்புகள் போராட்டம்!

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி மத்திய அரசாங்கத்திற்கு கீழ் செயல்படும் டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) தலித் சமூகத்தினரின் பழமைவாய்ந்த டில்லியின் துக்ளாகாபாத் பகுதியில் அமைந்திருந்த ரவிதாஸ் கோயிலை கடந்த ஆகஸ்ட் 10 அன்று இடித்தது.

500 ஆண்டுகால கோயிலை இடித்ததால் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் பிற மாநிலங்கள் சேர்ந்த தலித் சமூகத்தினர் லட்சக்கணக்கில் ஒன்றிணைந்து டில்லியில் உள்ள ராம்லில்லா மைதானத்தில் மாபெரும் போராட்டங்களை நடத்தின.தலித் அமைப்பான ‘பீம் ஆர்மியின்’ தலைவர் சந்திர சேகர் ஆசாத் தலைமையில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதாக கூறி போலீசார் 90 பேரை கைது செய்துள்ளனர்.

போராட்டக்காரர்களின் கருத்துக்கள் :

போராட்டத்தில் பங்கு கொண்ட 83 வயதான தைல் சிங் கூறுகையில் : “ஒரு தலித் என்பதால், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இந்த பிரச்சினையில் தலையிட்டிருக்க வேண்டும்” என்றார்.

“இந்த கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது. பல அரசாங்கங்கள் வந்து போயுள்ளன, ஆனால் யாரும் கோயிலை ஒன்றும் செய்திடவில்லை. ஆனால் இந்த ‘ஆன்டி-தலித் பாஜக’ தான் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

30 வயதான சோனு கூறுகையில் , “கோயிலை மாற்று இடத்தில் கட்டும்படி அவர்கள் எங்களிடம் கூறுகிறார்கள் . அப்படியானால் அவர்கள் ஏன் ராமர் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது? எல்லாம் ஒரு கண் சிமிட்டலில் நடந்தது. உச்சநீதி மன்றத்தின் உத்தரவு எங்களை அடையும் முன்னரே கோயிலை இடித்து உள்ளனர்.. ஏன் நாங்கள் இந்திய குடிமக்கள் இல்லையா? ” என்று கேள்வி எழுப்பினார்.

ரவிதாஸ் சமூகத்தினரின் குழு ஒன்றை தன் தலைமையில் கொண்டு பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மோடியைச் சந்தித்து இது தொடர்பாக பேசவுள்ளதாக அறிவித்துள்ளார். கோயிலை மீண்டும் கட்ட நிலம் ஒதுக்க பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காக காந்தி கடும் கண்டனம் விடுத்துள்ளார். “தலித்துகள் மீது அடக்குமுறையை அரசு கையாளுகிறது.இது உணர்வுப்பூர்வமான விஷயம்” என்று தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“கோடிக்கணக்கான தலித் சகோதர சகோதரிகளின் கலாசார அடையாளமாக ரவிதாஸ் இருக்கிறார். அவருக்கு கட்டப்பட்ட கோயில் விவகாரத்தில் பாஜக அரசு தொடர்ந்து குழப்பம் செய்து வருகிறது.இதற்கு எதிராக டெல்லியில் போராடிய தலித் மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.