Article 370 Fake News Kashmir

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் செய்தி வெளியிட்ட ஊடகங்கள்.!

பொய்களும், அரைகுறை உண்மைகளும் வேகமாகக் கவனம் பெற்றுவிடுவதன் அடையாளமே கீழ்கண்ட படம். இதனை ஆங்கிலத்தில் முன்னணி செய்தி தொலைக்காட்சியான இந்தியா டுடே எந்த ஆய்வும் செய்யாமல் வெளியிட அதனை சில தமிழ் ஊடகங்கள் செவ்வனே மொழியாக்கம் செய்து வெளியிட்டன. ஏன் இந்தப் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு தகவல்கள் தவறானவை அல்லது அரைகுறையானவை என அறிவோம்.

(I) காஷ்மீருக்கு என்று இரட்டைக் குடியுரிமை எல்லாம் இல்லை. இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சிறப்புக் குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியா ஒற்றைக் குடியுரிமை கொண்டிருக்கும் நாடு. வேறொரு நாட்டின் குடியுரிமையை ஒருவர் பெற்றால் அக்கணமே அவர் இந்தியக் குடிமகனாக இருக்க முடியாது. காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு என்று குறிப்பிட்ட சில சிறப்புரிமைகள் உண்டு. அது குடியுரிமை அல்ல. விடுதலை இந்தியாவில் குடியுரிமை எப்படிக் குடியுரிமை உருவம் பெற்றது என்று அறிய விரும்புபவர்கள் அவசியம் பேராசிரியர் நீரஜா கோபால் ஜெயலின்
‘Citizenship and its discontents’ நூலை வாசிக்க வேண்டும்.

(II) பொருளாதார அவசரநிலை (சட்டப்பிரிவு 360) என்பது இந்திய அரசமைப்பு அமலுக்கு வந்த பின்பு ஒரு முறை கூட அறிவிக்கப்பட்டதில்லை. இதுவரை ஜம்மு காஷ்மீரில் போர், அந்நிய தாக்குதலின் போது அவசரநிலையை அறிவிக்க இயலும்.

(III) சிறுபான்மையினருக்கு 16% இட ஒதுக்கீடு என்பது இன்னொரு பூசுற்றல். இந்த எண் எங்கிருந்து முளைத்தது என்று தேடிப்பார்த்தும் தெரியவில்லை. சமீபத்திய சட்டத்திருத்தம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மேல்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீட்டை காஷ்மீரில் உறுதி செய்துள்ளது. சீக்கியர்கள், இஸ்லாமியர்களிலும் மேல்சாதியினர் உண்டு. எதையாவது அடித்து விடுவது என்று வந்த பின்பு உண்மையைப் பற்றி என்ன கவலை?

(IV) ஒரு காஷ்மீரி பெண் வேறு மாநில நபரை மணந்தால் தன்னுடைய குடியுரிமையை இழக்கிறார் என்பது அடுத்தப் பிதற்றல். குடியுரிமையை நெறிப்படுத்தும் சட்டங்களில் இப்படியொரு சட்டப்பிரிவு இல்லவே இல்லை. வேறு மாநிலத்தவரை காஷ்மீரி பெண் திருமணம் செய்து கொண்டாலும் அவரின் குடியுரிமை அப்படியே இருக்கும். சிறப்புரிமைகளைத் தான் குடியுரிமை என்று எண்ணிக்கொண்டார்கள் என்று சமாளிக்க எண்ணுகிறார்களா? அடுத்தப் பத்தியை படிக்கவும்.

(V) காஷ்மீரி பெண் வேறு மாநில ஆணை திருமணம் செய்து கொள்வதால் காஷ்மீரிகளுக்கு என்று இருக்கும் சிறப்புரிமைகள் எதனையும் இழக்க மாட்டார் என்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு தீர்ப்பு நல்கியது. ஒரே ஒரு நீதிபதி மட்டுமே அத்தீர்ப்பில் முரண்பட்டார். புகழ்பெற்ற சுசீலா சாஹ்னி எதிர் ஜம்மு காஷ்மீர் அரசு வழக்கிலேயே இத்தீர்ப்பு 2002-ல் வழங்கப்பட்டது. ஆக இந்தக் குடியுரிமை, சிறப்புரிமை இழப்பு என்பதெல்லாம் இல்லை.

காண்க: https://www.google.com/amp/s/wap.business-standard.com/article-amp/pti-stories/j-k-women-marrying-non-natives-don-t-lose-residency-rights-expert-119012201079_1.html

(VI) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இருக்கிறது. முதலில் நீர்த்துப்போன ஒரு சட்டத்தை 2004-ல் மாநில அரசு நிறைவேற்றியது. 2009-ல் மத்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு இணையான தகவல் அறியும் உரிமைச்சட்டம் காஷ்மீரில் அமலுக்கு வந்தது.

(VII) இறுதியாக ஜம்மு காஷ்மீருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் பற்றிப் பேசுவோம். இந்தியாவில் சிறப்புரிமைகளை அனுபவிக்கிற மாநிலம் காஷ்மீர் மட்டுமில்லை. இந்தியா asymmetric federalism-ஐ பின்பற்றுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலசாரம், பண்பாடு, நடைமுறைகள், இந்தியாவோடு இணைந்த பாதை ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும். அதனால் அவற்றுக்கு ஏற்ப அரசியலமைப்பில் சிறப்புப் பிரிவுகளின் மூலம் சிறப்பு உரிமைகள் காஷ்மீர் அல்லாத பத்து மாநிலங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவாக அறிய படிக்கவும்:

https://www.google.com/amp/s/thewire.in/government/jammu-kashmir-constitution-special-powers-10-states/amp/

பகுத்தறிவும், அரசமைப்புச் சட்டம் குறித்த தேடலும் நம்மிடையே பெருகட்டும்.

நன்றி : பூ.கொ. சரவணன்