தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தொடர்ந்து கைது செய்து வருவதாக எம்.எல்.ஏவும், மனிதனேய ஜனநாயக கட்சி நிறுவனருமான எம்.தமிமுன் அன்சாரி கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் கண்டனம் தெரிவித்தார்.
பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தார் மேம்பாடு குறித்த விவாதத்தின் போது என்.ஐ.ஏ அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதும் , உடனே அவர்கள் போட்டோக்கள் மற்றும் இதர விவரங்களை மீடியாக்களில் வழங்கி, பின் மறு தினமே இவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று அறிந்து கொண்டு விடுவிக்கப்படுவதும் தொடர் கதையாகி உள்ளது . இதனால் அந்த இளைஞர்களின் வாழ்வே கேள்விக்குறி ஆகிவிடுகிறது என்றார்.
NIA குறித்து தொடர்ந்து பேசிய திரு. அன்சாரி .. “NIA குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைக்கின்றனர். பயங்கரவாதத்தையும் தீவிரவாதத்தையும் அனுமதிக்கக்கூடாது என்பதில் இரண்டாவது கருத்து இல்லை, ஆனால் ஒரு சமூகத்தை மட்டுமே தொடர்ந்து குறிவைப்பது ஏற்கத்தக்கது அல்ல. உங்கள் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் என்ஐஏவைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டவர் என்பதை நான் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன், ”என்று கூறினார்.
பொய்யை பரப்புகிறது என் ஐ ஏ – தமீமுன் அன்சாரி கடும் தாக்கு !
வெளிநாட்டில் பணிபுரியும் முஸ்லிம் இளைஞர்கள் மத்ரஸாக்கள் மற்றும் மசூதிகளை கட்ட நிதி திரட்டும்போது, அவர்கள் பயங்கரவாதத்திற்கான நிதி சேகரிப்பதாக என்ஐஏ பொய்யை பரப்புகிறது.எனவே ஒரு சமூகத்தை மட்டும் இலக்காக்கி இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்காதபடி முதலமைச்சர் இதைக் கவனித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறி முடித்தார்.
IUML எம்.எல்.ஏ அபுபக்கர் கண்டனம் :
கும்பல் வன்முறைக்கு (lynching ) எதிராக சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
“மதத்தின் பெயறால் அப்பாவிகள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்யப்படுவதற்கு எதிராக கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது, ராஜஸ்தான் அரசும் அது போன்ற சட்டத்தை செயல்படுத்தும் நிலையில் உள்ளது. எனவே தமிழகத்திலும் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் ”என்று திரு அபூபக்கர் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.