Gujarat Indian Judiciary Modi

குஜராத் கலவரம்: மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடியின் அறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தேதி அறிவிப்பு..

குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த சமயத்தில் 2002 ஆம் நடைபெற்ற கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்று எஸ்ஐடி யின் “கிளீன் சிட்” ஐ எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு “பல முறைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்துள்ளதாகவும், என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும்” என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

நடந்த சம்பவம்:

குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. எந்த வித விசாரணைக்கு முன்பே இதை முஸ்லிம்கள் தான் செய்தது என்று இந்துத்துவ கூட்டத்தார் பிரச்சாரம் செய்தனர், அதனை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. அப்போது (கடந்த பிப்ரவரி 28, 2002 ) குல்பர்க் சொஸைட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் முன்னால் எம்.பி இஹ்ஸான் ஜாஃபரி உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக முதல் அமைச்சர் நரேந்திர மோடி, அவருடைய மந்திரி சபை சகாக்கள், காவல்துறை அதிகாரிகள், பாரதிய ஜனதா பிரமுகர்கள் உள்பட 58 பேர் மீது இஹ்ஸான் ஜாஃபரியின் மனைவி ஜகியா ஜாஃபரி உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

கொல்லப்பட்ட எம்.பி இஹ்சானின் மனைவி ஜகியாவின் தரப்பில் வழக்கை ஒத்திவைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டதையடுத்து நீதிபதிகள் ஏ எம் கான்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஹோலி விடுமுறைக்கு பின்னர் ஏப்ரல் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொளவதாக அறிவித்துள்ளது.

பல முறை ஒத்திவைக்கப்பட்ட வழக்கு:

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவுக்கு எதிரான தனது மனுவை நிராகரித்த குஜராத் உயர்நீதிமன்றத்தின் அக்டோபர் 5, 2017 உத்தரவை எதிர்த்து ஜகியா 2018 இல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அப்போதிலிருந்து பல முறை வழக்கு ஒத்திவைக்கப் பட்டுவிட்டதால் என்றாவது ஒரு நாள் வழக்கை விசாரிக்க தானே வேண்டும் என்று தெரிவித்த உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தது.

பிப்ரவரி 8, 2012 அன்று, எஸ்ஐடி மோடி மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் உட்பட 63 பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிக்கையை மூடிய கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நரேந்திர மோடி உள்ளிட்டுப் பலரையும் விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், அவரைக் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதும், தெகல்கா வார இதழ் இதனை வெளியிட்டுச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ( பார்க்க: புதிய ஜனநாயகம், மார்ச் 2011)