Andhra Pradesh

ஆந்திரா: அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்ற முஹம்மத் கவுஸ்; போலீசார் தாக்கியதில் மரணம் ..

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க தடை இல்லை என ஏட்டளவில் சட்டம் வகுத்து மத்திய அரசு கூறினாலும், இந்தியாவின் பல மாநிலங்களில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் அப்பாவி பொதுமக்களையும் கூட போலீசார் கொடூரமாக தாக்கும் பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. எனினும் எந்த ஒரு சம்பவத்திற்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவ்வாறான ஒரு சம்பவம் ஆந்திரா மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சட்டென்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முஹம்மத் கவுஸ்,(வயது 28 அல்லது 35 என்று இரு விதமாக கூறப்படுகிறது). இவர் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் வழியில் போலீசார் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

கொடூரமாக தாக்கப்பட்ட கவுஸ் மயங்கி விழுந்துள்ளார், அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவுஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.

எனினும் போலீசார் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டை போலீசார் மறுத்தனர். முஹம்மத் கவுசின் உறவினர், நண்பர்கள் பொது மக்கள் என நூற்று கணக்கானோர் காவல்நிலையம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குண்டூரின் கூடுதல் எஸ்.பி. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் நடைபெற்றுள்ளது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இது குறித்து இன்று மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவரின் காணொளி மேலே

நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ அம்பதி ரம்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தப்படும். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்.