உபி பாஜக அமைச்சர் சுரேஷ் ராணா, பாஜக எம்.எல்.ஏ சங்கீத் சோம், வி.எச்.பி தலைவர் சாத்வி பிராச்சி உள்ளிட்ட 12 பாஜக தலைவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முசாபர்நகர் கலவர குற்ற வழக்குகளை வாபஸ் பெற உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள எம்.பி. / எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 27 அன்று அனுமதித்தது.
முக்கிய பாஜக தலைவர்கள் அனைவர் மீதும் ஒரு வழக்கும் கூட இல்லாமல் ‘கிளீன் சிட்’ வழங்கியுள்ளது நீதிமன்றம். அறுபது பேர் கொல்லப்பட்டு, 50,000 கும் மேற்பட்ட (முஸ்லிம்) மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வழிவகுத்த முசாபர்நகர் கலவரம் துவங்கிய சற்று முன் மேற்கூறப்பட்ட பாஜக தலைவர்கள் வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வீடியோக்கள் இன்று வரை ஆதாரங்களாக கண் முன்னே இருந்தபோதிலும் கூடுதல் அமர்வு நீதிபதி ராம் சுத் சிங் இவ்வாறு தீர்ப்பு அளித்துளள்ளது குறிப்பிடத்தக்கது.
முசாபர்நகர் கலவர வழக்கில், பாஜக தலைவர்கள் மீதான வழக்குகளை மட்டுமே சிறப்பு நீதிமன்றம் திரும்ப பெற்றது, மற்ற கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பபெறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. உதாரணமாக, காதிர் ராணா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் சயீத்-உஸ்-ஸமா (காங்கிரஸ்) போன்ற முஸ்லிம் தலைவர்கள் மீதும் கலவரத்தை தூண்டும் விதமாக பேசினார்கள் என்று இதே போன்ற வழக்கே பதியப்பட்டுள்ளது. இருப்பினும், இவர்களின் வழக்குகள் திரும்ப பெறப்படவில்லை.அரசியல் நோக்கங்களுக்காக சட்ட பிரிவு 321 இவ்வாறும் பயன்படுத்தப்படலாம் என்பதை இது அம்பலப்படுத்துகிறது.