டெல்லியில் நடந்த கலவரங்களிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மத்திய பாஜக அரசு கொரோனா வைரஸ் குறித்த பீதியைப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தொலைக்காட்சி சேனல்களில் ஒரு பகுதியினர் இந்த நோக்கத்திற்காகவே மத்திய அரசு பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மால்டா மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய முதலமைச்சர், கொரோனா வைரஸ் பீதியை ஒரு சாக்காக வைத்து டெல்லி கலவரம் குறித்த செய்திகளை மத்திய அரசு மறைக்க பார்ப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
“டெல்லியில் ஏன் இவ்வளவு பேர் கொல்லப்பட்டனர்? என்று மக்கள் மத்திய அரசிடம் கேட்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக கொரோனா வைரஸ் பீதியை மத்திய அரசு பயன்படுத்தப்படுகிறது” என்று மம்தா பானர்ஜி கூறினார்.
குஜராத் மாடலில் இனப்படுகொலை:
டெல்லியில் “குஜராத் மாடலில்” கலவரம் நடத்தப்பட்டதாக கூறிய அவர், நடந்தது உண்மையில் ஒரு இனப்படுகொலை என்று கூறினார்.
“சீக்கிய கலவரத்திற்குப் பிறகு டெல்லியில் நடந்ததைப் போன்ற பாரிய கலவரம் நடந்திருக்கிறதா? இது முற்றிலும் குஜராத் மடலில் நடத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் அவர்கள் செய்தது டெல்லியில் மீண்டும் செய்துள்ளனர். டெல்லியில் நடந்தது கலவரம் அல்ல, இனப்படுகொலை ”என்று மம்தா பானர்ஜி கூறினார்.
ஒரு வேளை கொரோனா வைரஸால் மக்கள் இறந்திருந்தால், சிறந்த முயற்சிகள் செய்தும் கூட வைரஸுக்கு எந்த சிகிச்சையும் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது என்ற ஆறுதல் இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
டெல்லியில் ஏற்பட்ட கலவரத்துக்கு இன்னும் பாஜக மன்னிப்பு கேட்கவில்லை என மமதா குற்றம் சாட்டினார்.
“ஆனால் அவர்கள் கொரோனா வைரஸால் இறக்கவில்லை. அவர்கள் ஒரு இனப்படுகொலையில் கொல்லப்பட்டனர். உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. இதற்கு இன்று வரை பாஜக மன்னிப்பு கேட்கவில்லை” என்று பானர்ஜி கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் பார்வையில் விசாரணை வேண்டும்:
வங்காளத்தில் சிறு சம்பவங்கள் நடந்தாலும் கூட சிபிஐ விசாரணையை கோரும் பாஜக, டெல்லி கலவரம் குறித்து வாயடைத்து கொண்டுள்ளது. டெல்லியில் நடந்த கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கீழ் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மமதா கோரினார்.
“பலர் கொலை செய்யப்பட்ட பிறகும் நீதி விசாரணை நடத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கீழ் நீதி விசாரணையை நாங்கள் கோருகிறோம்” என்று மம்தா பானர்ஜி பேசினார்..
குடியுரிமை வழங்கும் பெயரில் மக்களை துன்புறுத்துவதாக மத்திய அரசின் மீது குற்றம்சாட்டிய முதலமைச்சர், மேற்கு வங்கத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஒரு போதும் அமல்படுத்தப்படாது என மீண்டும் உறுதி அளித்தார்.